முன்னாள் தலைமை கணக்காய்வாளர் அம்ப்ரின் பூவாங், 1எம்டிபி தணிக்கை அறிக்கையை அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் வைத்தது தம் சொந்த முடிவாகும் என்றார். ஆனால், அது ஒரு தற்காலிக நடவடிக்கையே என்றாரவர்.
பொதுக் கணக்குக்குழு (பிஏசி)வும் 1எம்டிபிமீது ஒரு விசாரணையை நடத்திக்கொண்டிருந்ததால் அதன் விசாரணை முடிந்த பின்னர் தணிக்கை அறிக்கையை அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் வைத்திருக்க வேண்டியதில்லை, பொதுவில் வெளியிட்டு விடலாம் என்று திட்டமிட்டிருந்ததாக அம்ப்ரின் கூறினார்.
தணிக்கை அறிக்கையை அதிகாரப்பூர்வ சட்டத்தின்கீழ் வைக்கச் சொல்லி யாரும் வெளியிலிருந்து தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றாரவர்.
ஆனால், அதைப் பகிரங்கமாக வெளியிடக்கூடாது என்று முடிவு செய்தது பிஏசிதான் என்று அவர் கூறியதாக மலாய் மெயில் இன்று கூறியது.
“பிஏசி எங்கள் அறிக்கையை அதன் அறிக்கையுடன் இணைத்து வெளியிடும் என்று நினைத்தோம். ஆனால், அவர்கள் முடிவு வேறு மாதிரியாக இருந்தது”, என்றாரவர்.
பிறகு அம்ப்ரின் “அரசாங்கப் பாதுகாப்பு அலுவலகத்தை”த் தொடர்புகொண்டு பேசியபோது அது அறிக்கை ஓஎஸ்ஏ-இன்கீழ் இருப்பதுதான் நல்லது என்று கூறிவிட்டதாம்.
இப்போது 1எம்டிபி மீதான விசாரணைக்குத் தம்மை யாரும் அழைக்கவில்லை என்று கூறிய அம்ப்ரின் அழைத்தால் ஒத்துழைக்கத் தயார் என்றார்.
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் 1எம்டிபி தணிக்கை அறிக்கை அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின்கீழ் இருக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்து அதன்மீதான இரகசியக் காப்பு முத்திரையை அகற்றுமாறு கடந்த வாரம் போலீசுக்கு உத்தரவிட்டார்.