எம்பி போலீஸ் புகார்: அல்தான்துயா வழக்கு மறுபடியும் தொடங்க வேண்டும்

 

கொலை செய்யப்பட்ட மன்கோலியப் பெண் அல்தான்துயாவின் வழக்கு மறுபடியும் தொடங்க வேண்டும் என்று இன்று ஒரு போலீஸ் புகார் செய்யப்பட்டது.

அல்தான்துயா கொலைக்கான நோக்கங்கள் என்ன. அப்பெண்ணை கொலை செய்வதற்கு கமான்டோகள் சிருல் அஸ்ஹார் ஒமார் மற்றும் அஸிலா ஹாடிரி ஆகியோருக்கு இடப்பட்ட உத்தரவுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் இன்று போலீஸ் புகாரைச் செய்தார்.

கொலை செய்வதற்கு உத்தரவிட்டவர்கள் யார் மற்றும் அதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து உயர்நீதிமன்றம் மற்றும் பெடரல் நீதிமன்றம் ஆகிய இரண்டும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை லிம் சுட்டிக் காட்டினார்.

கொலையாளிகளில் ஒருவரான சிருல் என்ன நடந்தது என்பதைக் கூறுவதற்கு இப்போது விருப்பம் தெரிவித்திருப்பதை அவர் குறிப்பிட்டார்.

அல்தான்துயாவை கொலை செய்வதற்கு உத்தரவிட்ட நபர் அக்கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் லிம் அவரது போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

கடந்த வாரம், மங்கோலிய நாட்டின் அதிபர் அல்தான்துயாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க உதவும்படி பிரதமர் மகாதிரை கேட்டுக் கொண்டார்.