தாயிப் மீதான கோப்பை எம்எசிசி மறுபடியும் திறக்க வேண்டும், சரவாக் என்ஜிஒ கோரிக்கை

 

சரவாக்கின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ஆளுனருமான அப்துல் தாயிப் மாமுட் மீதான கோப்பை எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் சூக்கிரி அப்டுல் மறுபடியும் திறக்க வேண்டும் மற்றும் அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்த வேண்டும் என்று ஒரு சரவாக் அரசுசாரா அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மாற்றத்துக்கான இயக்கம், சரவாக் (எம்ஒசிஎஸ்) தலைவர் பிரான்சிஸ் பால் சியா இன்று மலேசியாகினிக்கு கொடுத்துள்ள ஓர் அறிக்கையில் தாயிப்புக்கு எதிராக மார்ச் 2011 ஆம் ஆண்டில் ஒரு புகார் செய்யப்பட்டது என்பதை எம்எசிசியின் புதிய தலைவருக்கு நினைவூட்டினார்.

எம்ஒசிஎஸ் செய்திருந்த அந்தப் புகார், அது மூடப்பட்டு மறக்கப்பட்டிருந்தாலும் கூட, மறுபடியும் திறக்கப்பட வேண்டும் என்று கூறிய சியா, அப்புகார் செய்யப்பட்ட பின்னர் அப்போதைய எம்எசிசி தலைமை ஆணையர் அபு காசிம், தாயிப் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று அறிவித்திருந்தார்.

இப்போது ஏழு வருடங்களுக்கு மேலாகி விட்டன. தாயிப் கோப்பு மீதான தகவல் ஏதும் இல்லை என்றாரவர்.

எம்எசிசி இப்போது ஒரு பெரும் ஊழல் எதிர்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளது. அது தாயிப்புக்கு எதிரான நடவடிக்கையில் படுவேகமாக செயல்பட வேண்டும். அவர் சரவாக்கில் இன்னும் பெருமளவிலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்று சியா தெரிவித்தார்.

தாயிப் அவரது ஆஸ்தானாவிலிருந்து இன்னும் சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஒபெங்கிற்கு உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறிய சியா, பல சான்றுகளையும் முன்வைத்தார்.