ஊடகம் மக்களின் குரலாக இருக்க வேண்டும். நான்காவது உயர் நிலை மக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள அது அரசாங்கத் தலைவர்களைத் தடுத்து நிறுத்தும் அதன் கடப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
சமீபத்தில், மே 9 இல் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்ற மகிழ்ச்சி நிலையில் ஊடகங்கள் அக்கூட்டணியை ஆதரித்தன.
இப்போது எல்லாம் அடங்கி விட்ட பின்னர், மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் அச்சமின்றி பேசும் மற்றும் குறைகூறும் உரிமையை ஊடகங்கள் பெற்றுள்ளன என்று பெர்மாத்தாங் பாவ்வில் நடந்த ஒரு பெரும் செராமாவில் அன்வார் கூறினார்.
“இந்த உலகில் நாங்கள்தான் மிகச் சிறந்தவர்கள்; எங்களுடைய பொருளாதரம் மிகச் சிறந்தது என்றெல்லாம் ஊடகங்கள் முந்தைய அரசுக்குத் துதிபாடி நின்றன.
“வீணானது, பொய்யர்கள். நாம் உண்மையான நிலவரத்தை எதிர்கொள்ள வேண்டும். ஊடகம் மக்களின் குரலாக இருக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் தலைவர்கள் சினத்துடன் எதிர்த்தடிக்கக் கூடாது, அவர்கள் ஊடக அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்”, என்று அன்வார் செராமாவில் கூடியிருந்த 3,000 மக்களின் ஆரவாரத்திற்கிடையில் கூறினார்.
தாமும் குறைகூறலுக்கு ஆளாகியிருப்பதாக அன்வார் கூறினார். அரசாங்க ஜெட் விமானத்தில் தாமும், தமது மனைவி, துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலும்,அவர்களது குழந்தைகளும் கிளந்தானுக்கு சென்றதற்காக குறைகூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் அது குறித்து விளக்கம் அளித்த அன்வார், கோத்தாபாருவில் பேரரசரின் தாயார் தெங்கு அனிஸ் தெங்கு அப்துல் ஹமிட் தமது குடும்பத்தினரை அழைத்திருந்ததாகவும், தாம் வான் அசிஸாவுக்குத் துணையாகச் சென்றதாகவும் விளக்கம் அளித்தார்.

























