பெர்லிஸ் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் பணிந்து போனார்கள்

பெர்லிசில்  மந்திரி  புசார்   அஸ்லான்   மானின்   பதவி  உறுதிமொழி   எடுத்துக்கொள்ளும்   சடங்கைப்  புறக்கணித்த   ஒன்பது  பிஎன்   சட்டமன்ற   உறுப்பினர்களும்   புறக்கணிப்பைக்    கைவிட்டுப்  பணிந்து   போவார்கள்   என்று   தெரிகிறது.

அந்த  ஒன்பது   பேரும்   அஸ்லானின்   நியமனத்தை    ஏற்றுக்கொண்டு   பெர்லிஸ்   ஆட்சியாளரிடம்   மன்னிப்பு    கேட்டுக்கொள்வார்கள்   என  எதிர்பார்க்கப்படுவதாக   ஸ்டார்   ஆன்லைன்   கூறிற்று.

அந்த  ஒன்பதின்மரும்   அண்மையில்   கூடிப்பேசி   அஸ்லான்  இரண்டாம்   தவணைக்கு    மந்திரி   புசாராக   நியமிக்கப்பட்டதை    ஏற்றுக்கொள்வதென  முடிவு    செய்ததாக     சட்டமன்ற   உறுப்பினர்களில்  ஒருவர்  கூறினார்.

“நாங்கள்  ஆட்சியாளருக்கு   விசுவாசமற்றவர்கள்   அல்லர்.  நாங்கள்   அவரின்  குடிமக்கள்”,  என்றாரவர்.

இதனிடையே,  அம்னோ  இடைக்காலத்    தலைவர்   அஹமட்  ஜாஹிட்,  பெர்லிஸ்    நெருக்கடி   விரைவில்   முடிவுக்கு   வரும்    என்றார்.  அதற்குமேல்   அவர்   எதுவும்  தெரிவிக்கவில்லை.

அஸ்லானை,   பெர்லிஸ்  ராஜா  துவாங்கு   சைட்   சிராஜுடின்   புத்ரா  ஜமாலுல்லாயில்   மந்திரி   புசாராக     தெரிவு   செய்தபோது   மேற்படி   ஒன்பதின்மரும்   அதை   எதிர்த்தனர்,   அஸ்லானின்   நியமனம்   கூட்டரசு    அரசமைப்புக்கும்   மாநிலச்    சட்டங்களுக்கும்   எதிரானது     என்றவர்கள்   போலீசில்   புகார்   செய்தனர்.