டாக்டர் எம் அதிகாரத்தில் இருக்கலாம், ஆனால் சீனா, மலேசியா உறவில் இன்னும் ஒன்றுக்கொன்று தேவை இருக்கிறது

மலேசியாவும் சீனாவும் தங்களுக்கிடையிலான உறவின் மதிப்பை அறிந்திருக்கின்றன, ஆக அதற்கு பங்கம் விளைவிக்கும் எதையும் அவையிரண்டும் செய்யத் தயாராக இல்லையென, ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிக்கை தனது தலையங்கத்தில் இன்று கூறியுள்ளது.

சீனாவின் மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடும் என்ற கவலைகள் காரணமாக பிரதமர் டாக்டர் மகாதிர், முரண்பாடான சில நடவடிக்கைகளில் இறங்கிய போதிலும் அப்பத்திரிக்கை இவ்வாறு கூறியுள்ளது.

“1984 முதல் 2003 வரை பிரதமராக இருந்த காலத்தில், மகாதிர் ஆசிய நாடுகளுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார், சீனாவுடன் நல்ல உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளார். பெய்ஜிங் மற்றும் சீன முதலீட்டாளர்கள் மீது அதிக அச்சம் கொண்டிருக்க வேண்டியதில்லை; இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் மதிப்பை, இரு தரப்பினரும் புரிந்து வைத்துள்ளனர்,” என அப்பத்திரிக்கையின் தலையங்கம் தெரிவிக்கிறது.

சீன முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு நிபுணத்துவங்கள் மலேசியாவுக்குத் தேவைபடுகின்றன என்று அது கூறியுள்ளது.

அதே நேரத்தில், வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில், சீனத் தொழில் நிறுவனங்கள் தங்கள் ஆக்கிரமிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் அது எச்சரித்துள்ளது.

ஜொகூரில், பெரும்பான்மை மலேசியர்களுக்கு எட்டாக் கனியாக விளங்கும், ஆடம்பர மேம்பாட்டுத் திட்டமான ‘ஃபோரஸ்ட் சிட்டி’ ,  வெளிநாட்டு சீனர்களை இலக்காகக் கொண்டு நிர்மாணிக்கப்படுவதாகக் கருதப்படுவதால், அப்பெருந்திட்டம் மீளாய்வு செய்யப்படும் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.

 

வெளிநாடுகளில் செயல்படும் போது, அந்நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அத்தலையங்கம் சீன நிறுவனங்களுக்கு நினைவூட்டி உள்ளது.