இரண்டாவது முறையாக பிரதமராகி இருக்கும் துன் டாக்டர் மகாதிர் முகமட், தற்போது நேரத்தைத் துரத்திக் கொண்டிருக்கிறார்.
பைனான்சியல் டைம்ஸ்– உடனான ஒரு நேர்காணலில், மீதமுள்ள தனது வயதில், தன்னால் முடிந்த அளவிற்கு நாட்டிற்குச் செய்யவுள்ளதாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“விரைவில் எனக்கு 93 வயதாகிவிடும்… என்னிடம் எஞ்சி இருக்கும் நேரத்தில், முடிந்த அளவுக்கு சாதிக்க நான் முயற்சிக்கிறேன்,” என அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், 1981 முதல் 2003 வரை அவர் பிரதமராக இருந்தார்.
2016-ல், 91 வயதாக இருந்தபோது, ஓய்விலிருந்து மீண்டு வந்த அவர், பக்காத்தான் ஹராப்பானுக்குத் தலைமை ஏற்று, 14-வது பொதுத் தேர்தலில், 61 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த கூட்டணி கட்சியை அகற்றினார்.
இன்னும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மே 16-ல், அரச மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலையான அன்வார், மகாதிர் நிர்வாகத்தை ஆதரிப்பதாக பேட்டியளித்தார். மேலும், தற்சமயம் அரசாங்கத்தில் சேர விரும்பவில்லை என்றும், குடும்பத்தினரோடு ஓய்வெடுக்க உள்ளதாகவும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரை ஆற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு உத்வேகம்
இதற்கிடையில், மே 9-ல், மலேசியர்கள் எடுத்த முடிவு, சுதந்திரம் பெற்றது முதல் ஒரே கட்சி ஆட்சியின் கீழ் உள்ள சிங்கப்பூரர்களுக்கும் ஓர் உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்புவதாக மகாதிர் கூறினார்.
“மலேசியர்களைப் போல, சிங்கப்பூரர்களுக்கும் ஒரே அரசாங்கத்தில் இருப்பது சலித்துபோய் இருக்கும் என நான் நினைக்கிறேன்.”
1959 முதல் பொதுத் தேர்தலிலிருந்து, 59 ஆண்டுகளாக மக்கள் செயற்கட்சி (பிஏபி) நாட்டை ஆட்சி செய்து வருகிறது.
அந்த நேர்காணலில், மகாதீர் அண்டை நாட்டைக் கடுமையாக விமர்சிப்பதில் ஆர்வமாக இருந்ததாக பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது.
அவரது 22 ஆண்டுகால முந்தைய நிர்வாகத்தின் போது, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான உறவு – லீ குவான் யூ – மகாதிர் – எப்போதும் அமைதியாக இல்லை.
ஜிஇ முன்னதான ஒரு நேர்காணலில், அவர் சிங்கப்பூருக்கு விரோதமாக இருப்பதாக கூறப்படுவதை மறுத்தார், ஆனால் அவரும் சிங்கப்பூர் முதல் பிரதமரும் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதில், எப்பொழுதும் ஒரே அணுகுமுறையைப் பகிர்ந்து கொண்டதாக வலியுறுத்தினார்.
நாட்டின் கடனைக் குறைக்கும் பொருட்டு, பிஎன் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கோலாலம்பூர்-சிங்கப்பூர் ஹை ஸ்பீட் ரெயில் (எச்.எஸ்.ஆர்.) திட்டத்தை இரத்து செய்யவுள்ளதை நேற்று மகாதிர் உறுதிப்படுத்தினார்.