பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் யூ.ஐ.தி.எம். : 100,000 க்கும் அதிகமானவர்கள் எதிர்ப்பு

‘பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) திறந்துவிடப்பட வேண்டும்’ எனும் திட்டத்தை எதிர்க்கும் வகையில், 24 மணிக்கும் குறைந்த நேரத்தில், 100,000-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் எதிர்ப்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

நேற்று, அப்பல்கலைக்கழகத்தைப் பிற இனங்களுக்கும் திறந்துவிட வேண்டும் எனும் ஹிண்ட்ராப் 2.0 முன்மொழிவுக்குப் பதில் அளிக்கும் வகையில், அக்கையெழுத்து பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை 105,725 கையெழுத்துகள் பெறபட்டுவிட்டதாகவும், 150,000 பேரிடம் கையொப்பம் வாங்க உள்ளதாகவும் இப்பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள முன்னாள் மாணவர் சங்கத் (பிஏயுஐடிஎம்) தலைவரும் உத்துசான் மலேசியாவின் துணைத் தலைமை ஆசிரியருமான முகமட் ஜைனி ஹாசான் கூறினார்.

“யுஐடிஎம் அனைத்து இனங்களுக்கும் திறந்துவிட மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும், பிஏயுஐடிஎம் உறுதியாகவும் ஒருமனதாகவும் எதிர்க்கிறது.

“யுஐடிஎம், மலாய் மற்றும் பூமிபுத்ரா குழந்தைகளுக்கான உயர்மட்டக் கல்வி கூடமாகும், மத்திய அரசியலமைப்பின் 153-வது பிரிவில், மலாய் சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் கூறுகளில் அது ஒரு பகுதியாகும்,” என்று அவர் விளக்கினார்.

பூமிபுத்ராக்கள் மத்தியில், ஹிண்ட்ராப்-இன் செயல் கோபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சங்கம் கவலை கொள்வதாக, 700,000 உறுப்பினர்களைப் பிரதிநிதிக்கும் பிஏயுஐடிஎம் கூறுகிறது.

“நாட்டின் பல சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு கோரிக்கைக்கும் பிரதமர் மகாதிர் கவனம் கொள்ளவேண்டும் என்பதை பிஏயுஐடிஎம் அறிந்திருந்தாலும், மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதுபோன்ற மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் அறிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் முகமட் ஜைனி கூறினார்.

ஹிண்ட்ராப் 2.0 தலைவராக பி.உதயகுமார் இருக்கும் வேளை, அவரது சகோதரர் பி.வேதமூர்த்தி மலேசிய ஹிண்ட்ராப் இயக்கத்திற்கு (பி.எச்.எம்.) தலைவராக உள்ளார்.

பிஎச்எம் பக்காத்தான் ஹராப்பானின் மூலோபாய பங்காளியாக உள்ளது, ஆனால் ஹிண்ட்ராப் 2.0 அதிகாரப்பூர்வமாக அக்கூட்டணியுடன் தொடர்புடையது அல்ல.

முன்னதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், எந்தவொரு முரண்பாடான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாமென தனது சகோதரர் மற்றும் ஹிண்ட்ராப் 2.0-ஐயும் வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

“உதயகுமாருக்கு நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன், இந்த யுத்தம் பிஎன் தோல்வியுடன் முடிவடைந்துவிட்டது. எனவே, உதயகுமார் இதுபோன்ற நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்க வேண்டும், தற்போதையப் புதிய மலேசிய அரசு உருவாகக் கடினமாக உழைத்தவர்களுடன் சேர வேண்டும்.

“ஹராப்பானுக்கு ஆதரவளித்த அனைவரின் கடின உழைப்பையும் அங்கீகரிக்கும் வகையில், மலேசியப் புதிய சமூகத்தைக் கட்டியெழுப்பும் நேரம் இது,” என்று அவர் கூறினார்.