எஸ்எஸ்டி செப்டம்பரில் அறிமுகம்

பொருள்,  சேவை    வரி(ஜிஎஸ்டி)க்குப்   பதில்   கொண்டுவரப்படவுள்ள    விற்பனை  மற்றும்  சேவை   வரி   செப்டம்பர்   வாக்கில்    அறிமுகமாகலாம்.

நிதி  அமைச்சர்   லிம்   குவான்   எங்கின்   சிறப்பு    அதிகாரி  ஒங்   கியான்    மிங்    பிஎம்எப்  வானொலிக்கு   அளித்த    நேர்காணலில்   இதைத்   தெரிவித்தார்.

“விரைவில்  எஸ்எஸ்டியை   அமல்படுத்த   முடியுமா   என்பதை   ஆராய்ந்து   வருகிறோம்.  செப்டம்பரில்   அது   கொண்டுவரப்படலாம்”,  என்றாரவர்.

ஜிஎஸ்டி-யை   ஜூன்   முதல்  நாளுக்குள்  எடுத்து  விடத்   திட்டமிடப்பட்டுள்ளது.  எஸ்எஸ்டி   செப்டம்பரில்தான்   அறிமுகமாகும்  என்பதால்  இடையில்   மூன்று  மாதங்களுக்குப்  பொருள்களுக்கும்    சேவைகளுக்கும்  வரி   இருக்காது.

இது  பொருளாரத்துக்கு   ஓர்  ஊக்கவிசையாக   அமையும்  என்றும்   ஒங்   நம்புகிறார்.

“(எடுத்துக்காட்டுக்கு)  எஸ்எஸ்டி   அறிமுகமாகும்வரை    வரி   கிடையாது     என்பதால்     பலர்   கார்   வாங்க    விரும்பலாம்.

“அந்த   வகையில்  இது   மலேசிய   மக்களுக்குப்  புதிய   அரசாங்கத்தின்   அன்பளிப்பாகும்”,  என்றார்.

புதிய   வரியால்   பொருள்களின்   விலை  உயருமா  குறையுமா   என்ற  விவாதம்  ஒருபுறம்    நடந்துகொண்டிருக்க   எஸ்எஸ்டியால்   அரசாங்கத்துக்குக்  கிடைக்கும்   வருமானம்  குறையும்     என்கிறார்  ஒங்.

“ஜிஎஸ்டியால்   ரிம40 பில்லியனுக்குமேல்    வருமானம்   கிடைத்து   வந்த   இடத்தில்   எஸ்எஸ்டியால்  ரிம20,  25 பில்லியன் மட்டுமே  கிடைக்கும்”,  என்றாரவர்.

ஆறு  விழுக்காடு    ஜிஎஸ்டி   அறிமுகப்படுத்தப்படுவதற்கு  முன்பு    10  விழுக்காடு  எஸ்எஸ்டி   அமலில்   இருந்தது.

“ஜிஎஸ்டி   6  விழுக்காடு,   எஸ்எஸ்டி  10  விழுக்காடு   என்பதைப்  பார்த்து    மக்கள்  குழம்பிவிடக்கூடாது. எல்லாப்  பொருள்களுக்கும்   எஸ்எஸ்டி  கிடையாது.  மேலும்,  தயாரிப்புக்  கட்டத்தில்  மட்டும்தான்  எஸ்எஸ்டி  விதிக்கப்படும்.  பொருள்  வாங்கப்படும்   கட்டத்தில்   அல்ல”,  என்றவர்   சொன்னார்.