மே 18 இல் போலீசார் பெவிலியன் ரெசிடென்சஸ்சில் மேற்கொண்ட அதிரடி சோதனைகள் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் நஜிப்பிடம் போலீசார் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் லங்காக் டூத்தாவிலுள்ள நஜிப்பின் இல்லத்திலிருந்து பிற்பகல் மணி 1.45 க்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு அவர்கள் இரண்டு மணி நேரம் இருந்தனர்.
இந்த வாக்குமூலம் எடுக்கும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நஜிப்பின் ஆடம்பர இல்லங்களில் போலீஸ் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் அவருக்குச் சொந்தமான விலையுயர்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி நஜிப் பெக்கான் போலீஸ் நிலையத்தில் செய்திருந்த புகாருக்குப் பின்னர் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று, போலீஸ் நஜிப்பின் மகள் நூர்யானா நாஸ்வாவின் சொத்துகள் அந்த இல்லங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது பற்றியும் நூர்யானாவிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.
டாங் வாங்கி போலீஸ் நிலையத்தின் தலைவர் ஷஹாருடின் அப்துல்லா போலீசார் இன்று நஜிப்பின் இல்லத்தில் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.