ஆர்டிஎம்-இல் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம், புத்ராஜெயா ரிம40 மில்லியன் ஒதுக்கீடு

2018 உலகக் கோப்பைக்கான 64 போட்டிகளில், 41 ஆட்டங்களை ஆர்டிஎம் ஒளிபரப்ப உள்ளது, இதில் 27 போட்டிகள் நேரடி ஒளிபரப்பாகவும் 14 ஆட்டங்கள் தாமதமாகவும் ஒளிபரப்பப்படும்.

தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர், கோபிந்த் சிங் டியோ, அந்த ஒளிபரப்புக்கான உரிமைகளை வாங்க, அமைச்சரவை 40 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

அந்த ஒதுக்கீட்டின் செலவினங்கள் பற்றி, நாளை நடைபெறவுள்ள நாட்டின் நிதிதுறையின் விசேட மாநாட்டில் விளக்கப்படும் என கோபிந்த் சொன்னார்.

“ஒட்டுமொத்தமாக, முன்பு அமைச்சரவை தெரிவித்த தொகை 40 மில்லியன். நிச்சயமாக ஆதரவாளர்களும் இருப்பார்கள், ஆக, அத்தொகையில் பெரும்பகுதி ஆதரவாளர்கள் மூலம் ஈடுசெய்யப்படும்,” என்று அவர் இன்று மாலை தனது அமைச்சக அதிகாரிகளிடம் பேசிய பின்னர் கூறினார்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலகக் கோப்பை நேரடி ஒளிபரப்பை முன்மொழிந்ததாக அவர் சொன்னார்.

“2018 உலகக் கோப்பை, ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக இருப்பதால், அதனை ஆர்டிஎம் நேரடி ஒளிபரப்பு செய்வது வரவேற்கத்தக்கது,” என்று அவர் மேலும் கூறினார்.