புத்ராஜெயாவைப் பின்பற்றி, ஜொகூர் ஆட்சிகுழு உறுப்பினர்களுக்கும் சம்பளத்தில் 10 விழுக்காடு குறைக்கப்படவுள்ளது.
இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், மத்திய அரசைப் பின்தொடரும் முதல் மாநிலமாக ஜொகூர் விளங்குகிறது என்று மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் கூறினார்.
முன்னதாக, பிரதமர் துன் மகாதிர், செலவினங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாக அமைச்சர்களின் சம்பளத்தில் 10 விழுக்காடு கழிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஆட்சிகுழு உறுப்பினர்களுடன் கலந்துபேசிய பிறகு, இந்தச் சம்பளக் கழிவு நடைமுறைபடுத்தப்படும் என்று, கடந்த சனிக்கிழமை ஒஸ்மான் கூறியிருந்தார்.
மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அலவன்ஸ் வழங்கப்படுவதோடு, மாநிலச் சட்டமன்றத்தில் அவர்களுக்கு அலுவலகமும் ஒதுக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பினாங்கு, சிலாங்கூரை அடுத்து, எதிர்க்கட்சியினரை அங்கீகரிக்கும் மூன்றாவது மாநிலமாக ஜொகூர் விளங்கும்.
மேலும், மக்கள் சேவையாற்ற ஆளுங்கட்சியினரைப் போலவே எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ரிம 50,000 வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.