பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் நாடு முழுக்கப் பயணம் செய்து பல ஆட்சியாளர்களைச் சந்திப்பது பலரையும் பல மாதிரி பேச வைத்துள்ளது.
அது குறித்து பிகேஆர் தலைவர் ஒருவரை மலேசியாகினி வினவியதற்கு, “அவை சாதாரண சந்திப்புகளே”, என்றார்.
“நான் நினைக்கிறேன், சுல்தான்கள் (பிரதமர் டாக்டர்) மகாதிர் (முகம்மட்) குறித்து எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் இது (அவர்கள் அன்வாருடன் ஆலோசனை கலப்பது) இயல்பானதே”, என்றார்.
அன்வார் அம்னோ தலைவர்களையும் சந்திப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
சில தரப்புகள் அன்வார் குறித்து எதிர்மறையான கருத்து உருவாக இப்படிப்பட்ட வதந்தியைப் பரப்பி வருகின்றனர் என்றாரவர்.
அப்படிச் செய்பவர்கள் கட்சிக்குள் இருப்பவர்களா, வெளியாரா என்று கேட்டதற்கு அவர் விவரிக்க மறுத்தார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னர் மகாதிரும் அன்வாரும் ஒர் உடன்பாடு செய்து கொண்டனர். இரண்டாண்டுகளில் பின்னவர் முன்னவரிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்பது என்பதுதான் அந்த உடன்பாடு.
அதன்பின்னர் மகாதிர் ஒருமுறை பேசும்போது பிரதமர் பதவியை ஒப்படைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலவரையறை கல்லில் எழுதப்பட்ட எழுத்து அல்ல என்றும் பதவி இறங்குவதற்குமுன் செய்ய வேண்டியது நிறையவே உள்ளது என்றும் சொன்னார்.
அன்வாரைப் பொருத்தவரை, அவ்விவகாரம் பற்றிப் பேசவே அவர் விரும்புவதில்லை. கேட்டால் வெளிநாடு செல்வது, சொற்பொழிவாற்றுவதுதான் தம்முடைய உடனடித் திட்டம் என்கிறார்.
இன்று காலை அன்வார் சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவைச் சென்று கண்டார்.
இதற்கு முன்பு, ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இஸ்கண்டர் சுல்தான் இப்ராகிம், பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், பகாங் அரசப் பேராளர் தெங்கு அப்துல்லா சுல்தான் அஹமட் ஷா, கிளந்தான் அரசப் பேராளர் தெங்கு முகம்மட் பைஸ் பெட்ரா ஆகியோரையும் அவர் சந்தித்தார்.
மே 24-இல் அன்வாரும் அவரின் குடும்பத்தாரும் பேரரசர் சுல்தான் ஐந்தாம் முகம்மட்டையும் அவரின் தாயார் தெங்கு அனிஸ் தெங்கு அப்துல் ஹமிட்டையும் கிளந்தான், குபாங் கெரியானில் உள்ள இஸ்தானா மக்கோத்தாவில் சென்று கண்டனர்.
அதை அடுத்து அன்வாரின் மகளும் பிகேஆர் உதவித் தலைவருமான நூருல் இஸ்ஸா சுல்தான் ஐந்தாம் முகம்மட்டை மணக்கப் போகிறார் என்று ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால், நூருலும், துணைப் பிரதமரும் அவரின் தாயாருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் அது பொய்யான செய்தி என்று மறுதலித்தனர்.