தமிழ்ப்பள்ளி பாதுகாப்பு காவலர்கள் ஏன் குத்தகை முறையில் அமர்த்தப்பட வேண்டும்?, மந்திரி கவனிப்பாரா?

 

இன்று, சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நான் ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் செல்ல வேண்டியதாயிற்று. என்னை அழைத்துச் சென்றவர் அவர் வந்த வேலையை முடித்துக் கொண்டும் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாயிற்று.

இதற்கிடையில், அப்பள்ளியின் வளாகத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தேன். அப்பள்ளியின் வேலைக்காரர்கள் அங்கும் இங்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தனர்.

என்ணைப் பார்த்து சிலர் கையசைத்தனர். சிலர் புன்னகை செய்தனர். சில நிமிடங்களுக்குப் பின்னர் சீருடையணிந்திருந்த சில பெண் பாதுகாப்பு காவலர்கள் என்னிடம் பேசத் தொடங்கினர்.

என்ன, எல்லோரும் செளக்கியமா, நல்ல சம்பளம் கிடைக்குதா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவ்வளவுதான். புன்னகையுடன் காணப்பட்ட அவர்களின் முகத்தில் சோகம் பரவியது.

என்ன சார், எங்களுக்கு கிடைக்கிறது போதுமானது இல்லை, சார். அதுவும் ஒழுங்காக கிடைக்கல, சார். ஒரு மாசத்துக்கு மேலே இழுக்கடிக்கிறாங்க, நாங்கள் கஷ்டப்படுகிறோம் என்று அவலக் குரல் எழுப்பினார்கள்.

உங்களுடைய சம்பளம் ஒழுங்காகக் கிடைக்க நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா என்று கேட்டதற்கு, தொலைஞ்சோம், சார் என்றனர்.

அவர்கள் முகத்தில் பயம் தென்பட்டது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு சில நிமிட அமைதிக்குப் பின்னர் ஒருவர் கேட்டார்: சார், இந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை செய்கிற வாத்தியாருங்க, கிராணிங்க, கூட்டரவங்க, எடுக்கிறவங்க எல்லாருக்கும் கவர்மெண்ட் சம்பளங்க. எங்க வேலைக்கு மட்டும் கொண்ரேக்கு. ஏன் இப்படி, சார்?

இந்தப் பிரச்சனை பற்றி நீங்கள் யாரிடமாவது முறையிட்டதுண்டா என்று கேட்டதற்கு, இல்லவே இல்லை என்றனர்.

அப்போது குறுக்கிட்ட ஒரு இளம் பெண் பாதுகாப்பு காவலர் தொழிற்சங்கம் பற்றி பேசியதாகவும், அதைக் கேட்டதும் நீ செத்தடி என்று அவருடன் இருந்தவர்கள் சத்தம் போட்டதாகவும் கூறினார்.

தொழிற்சங்கம் என்றால் சாவு என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் என்றுமே நடைப்பிணமாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

எங்களுக்கு வேற வழியே இல்லையா, சார் என்று கேட்டனர்.

வழிகள் இருக்கின்றன. நீங்கள் முன்வர வேண்டும் என்று நான் கூறினேன். உங்களுக்கு புதிய மனிதவள அமைச்சரைத் தெரியுமா என்று கேட்டேன்/.

யாரு, சார், நம்ம இந்திரா காந்திக்கு பைட் பண்ணாரே, அவருதானே, சார் என்று அங்கிருந்தவர்களில் சீருடை அணியாதிருந்த ஒருவர் கூறினார்.

அவரேதான். அவரைப் பார்த்து முறையிடுங்கள் என்று நான் கூறியதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கிட்டத்தட்ட ஒரே குரலில், நாங்க மட்டும் இல்லை, சார். தமிழ்ப்பள்ளிகளில் ஜாகா வேலை செய்ர எல்லாருக்கும் இதே கதிதான். தயவு செய்து, எங்களை பள்ளிக்கூட வேலைக்காரர்களாக மாற்ற அவர்கிட்ட கொஞ்சம் பேசுங்க, சார்.

சரி, சரி. உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. வரும் சனிக்கிழமை அந்த அமைச்சர் எங்களுக்கு தரிசனம் அளிக்க வருகிறார். சந்தர்ப்பம் கிடைத்தால், அவர் காது கொடுத்து கேட்க சம்மதித்தால், கட்டாயமாக அவரிடம் இது பற்றி கூறுவேன் என்று நான் கூறினேன்.

அடேயப்பா, என்ன மகிழ்ச்சி அவர்களுடைய முகத்தில்.

அவர்களில் ஒருவர், எங்களுக்கு மட்டும் இல்லை, சார். தமிழ்ப்பள்ளிக்கூடத்தில் இந்த வேலையில் இருக்கிற எல்லாருக்கும், சார், என்றார்.

-ஜீவி காத்தையா.