0% ஜி.எஸ்.டி. : ஜி.எஸ்.டி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி

14-வது பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஜூன் 1, 2018 முதல் ஜி.எஸ்.டி. வரியை அகற்றுவதாக அறிவித்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நடவடிக்கையை, ‘ஜி.எஸ்.டி. எதிர்ப்புக் கூட்டணி’ வரவேற்கிறது.

“ஜி.எஸ்.டி.-க்கு எதிரான போராட்டம் 2005-இல் தொடங்கியது. அந்த நேரத்தில், ஜி.எஸ்.டி. என்றால் என்னவென்று மக்களில் பலர் அறிந்திராத நேரத்தில், மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அணி இரண்டும், இன்னும் பிற அமைப்புகளுடன் இணைந்து ‘ஜி.எஸ்.டி. எதிர்ப்பு கூட்டணி’-ஐ அமைத்தது. அக்கூட்டணி முன்னெடுத்த பல போராட்டங்களின் காரணமாக, ஜி.எஸ்.டி. அமலாக்கம் தாமதமானது,” என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நளினி ஏழுமலை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நளினி ஏழுமலை

ஜி.எஸ்.டி.-க்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டு மே 1 கொண்டாட்டங்களின் போது தீவிரமாகத் தொடங்கியதாக நளினி தெரிவித்தார்.

“ஆயிரக்கணக்கான மக்கள் தொழிலாளர் தின அணிவகுப்புகளில் கலந்துகொண்டு, ஜி.எஸ்.டி.-க்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

“மார்ச் 23, 2015 ஜிஎஸ்டி எதிர்ப்புக் கூட்டணியின் உச்சநாள் எனலாம். அன்றைய தினம், கிளானா ஜெயா சுங்கத்துறை தலைமையகத்தில், ஜி.எஸ்.டி. தொடர்பான சுமார் 100 கேள்விகளுடன் கூடியிருந்தோம். எங்கள் கேள்விகளுக்கு முறையான பதில் வராததால் நாங்கள் ‘குந்தியிருப்பு’ போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட பொது மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

“இக்கைது நடவடிக்கை ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது, அதனால் மக்கள் ஜிஎஸ்டி-யின் குறைகளை அறியத் தொடங்கினர்,” என்றார் நளினி.

2015 – கிளானா ஜெயாவில் ஜி.எஸ்.டி எதிர்ப்பு குந்திருப்பு போராட்டம்

“இருப்பினும், பாரிசான் அரசாங்கம் ஜிஎஸ்டி-ஐ 2015, ஏப்ரல் 1 முதல் அமலாக்கம் செய்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஜிஎஸ்டி பி.என். அரசாங்கத்தைக் கவிழ்க்கும் என நிச்சயம் அந்நேரத்தில் பாரிசான் தலைவர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள்,” என அவர் மேலும் சொன்னார்.

ஜி.எஸ்.டி. எதிர்ப்புப் போரட்டத்தில் பங்கெடுத்ததால், வேலையை இழந்த ஒரு சமூகப் போராட்டவாதி குறித்தும் நளினி தனது அறிக்கையில் பகிர்ந்துகொண்டார்.

“கோகிலா, பேங்க் நெகாராவில் மேலாளர், தொழிலாளர் தினப் பேரணியில் ‘ஜி.எஸ்.டி. எதிர்ப்பு டி-சட்டை’ அணிந்திருந்த ஒரு காரணத்தால், 2017, ஜூலை 19-ல் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

“ஒரு தொழிலாளி, வேலை நேரத்திற்கு வெளியே, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது எப்படி தவறாகும்? பேங்க் நெகாரா ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையை மதிக்கத் தவறிவிட்டது, 12 வருடங்கள் சேவையாற்றிய கோகிலாவை வேலையில் இருந்து நீக்கியது,” என்றார் மனித உரிமை போராட்டவாதியுமான நளினி.

கோகிலா

“நாளை, ஜூன் 1, 2018 முதல், ஜி.எஸ்.டி. சுழியம் விழுக்காடு, எதிர்காலத்தில் அது முழுமையாக அகற்றப்படலாம். இச்சூழ்நிலையில், கோகிலாவுக்கு ஏற்பட்ட அடக்குமுறைக்கு ஒரு தீர்வு பிறக்குமா? பேங்க் நெகாரா கோகிலாவை மீண்டும் அதே பணியில் அமர்த்துவதோடு, இதுவரை அவருக்கு ஏற்பட்ட இடர்களுக்கு நஷ்டஈடு கொடுக்குமா?” என நளினி கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஜூன் 1, 2018, ஒரு வரலாற்றுப் பூர்வமான நாள், உலகிலேயே ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்குப் பின், அகற்றப்பட்ட ஒரே நாடு மலேசியாதான்.

“மலேசியர்கள் இந்நாளை கொண்டாடி மகிழவுள்ள நேரத்தில், கோகிலா மீண்டும் பேங்க் நெகாரா மேலாளர் பணியில் அமர்த்தப்பட வேண்டுமென ‘ஜி.எஸ்.டி. எதிர்ப்புக் கூட்டணி’ எதிர்பார்க்கிறது,” என்று நளினி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.