டிபிகேஎல் நில விற்பனையை முடக்கி வைக்க உத்தரவு

கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழக(டிபிகேஎல்)  நிலங்கள்  விற்கப்படுவதை   முடக்கிவைக்குமாறு   தாம்   பணிக்கப்பட்டிருப்பதாக   கூட்டரசுப்   பிரதேச   நில,  சுரங்கத்துறை   இயக்குனர்  ஷாரெஸ்  இஸ்வான்  முகம்மட்   ஜைடி   கூறினார்.

அரசாங்கத்   தலைமைச்   செயலாளர்   அலி  ஹம்சாவைச்   சந்தித்த   பின்னர்   அவர்  இதனைத்  தெரிவித்தார். அலி  ஹம்சா  டிபிகேஎல்   நில   விற்பனை   விவகாரங்களுக்குப்   பொறுப்பான        கோலாலும்பூர்    கூட்டரசுப்   பிரதேச  பணிக்குழுத்  தலைவருமாவார்.

கோலாலும்பூரில்  64  துண்டு  நிலங்களின்  விற்பனை  சந்தேகத்துக்கு  இடமளிப்பதாகவும்  அவ்விசயத்தில்   அலி  ஹம்சா   தலையிட   வேண்டும்   என்றும்  நேற்று   சீபூத்தே   எம்பி   தெரேசா   கொக்     கேட்டுக்கொண்டிருந்தார்.
நில  விற்பனைக்கு  ஒப்புதல்   அளிக்க   வேண்டாம்   என்று    நில   அலுவலகத்துக்கு  உத்தரவிடும்   அதிகாரம்     தலைமைச்   செயலாளருக்கு   மட்டுமே   உண்டு   என்பதால்  அவர்    அவ்வாறு   கேட்டுக்கொண்டார்.

தெரேசா,  நேற்று   கோலாலும்பூர்  மேயர்   முகம்மட்  அமின்   நோர்டின்  அப்ட்   அசீஸுடனும்   கோலாலும்பூர்   கூட்டரசுப்   பிரதேசத்தின்   10  எம்பிகளுடனும்   பேச்சுகள்   நடத்தியதாகவும்   கூறப்படுகிறது.

முன்னதாக,   கெப்போங்   எம்பி   லிம்  லிப்   எங்   2014க்கும்  2018க்குமிடையில்  டிபிகேஎல்லுக்குச்    சொந்தமான  64   நிலங்கள்  விற்கப்பட்டது   தொடர்பில்   எம்ஏஏசி-இடம்  புகார்   செய்திருந்தார்.

அந்த  நில  விற்பனை  மீதான    அறிக்கை   மே 15-இல்  கூட்டரசுப்   பிரதேச   எம்ஏஏசி-இடம்  ஒப்படைக்கப்பட்டது.