டோனி பெர்னாண்டசை இந்தியாவின் சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது

ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்ணான்டசுக்கு   ஜூன்  6ஆம்  நாள்   இந்தியாவுக்கு  விசாரணைக்கு    வரவேண்டும்   என்று   இந்தியாவின்   மத்திய   புலனாய்வுத்   துறை(சிபிஐ)    அழைப்பாணை   அனுப்பியிருப்பதாக   டைம்ஸ்   அப்    இந்தியா   இன்று  கூறியது.

அந்த   அழைப்பாணை   மின்னஞ்சல்   வழி   அனுப்பப்பட்டதாக   சில   வட்டாரங்கள்   தெரிவித்ததாக   அந்நாளேடு   கூறிற்று.   அதற்கு  டோனி   பெர்னாண்டஸ்  பதிலளித்தாரா    என்பது    தெரியவில்லை.

இரண்டு   நாள்களுக்குமுன்னர்தான்    சிபிஐ   ஏர்  ஏசியாமீது   ஊழல்  குற்றம்  சாட்டியிருந்தது.   அந்நிறுவனத்தின்   அதிகாரிகளும்   சில   மூன்றாம்    தரப்புகளும்    விமானச்  சேவைக்கான   லைசென்ஸ்  பெறுவற்காக  அன்னிய  நேரடி   முதலீட்டு   விதிமுறைகளை  மீறினார்கள்   என்றும்,   ஏர்  ஏசியா  இந்தியா   அனைத்துலகச்   சேவைகளை   இயக்குவதற்கு   வசதியாக   விதிமுறைகளைத்   தளர்த்த   அரசு   அதிகாரிகளுக்குக்  கையூட்டு  கொடுக்கப்பட்டது   என்றும்  அது  குற்றம்  சாட்டியிருந்தது.

ஏர்  ஏசியா  இக்குற்றச்சாட்டுகளை   மறுத்துள்ளது.  அவை  “ஆதாரமற்ற   குற்றச்சாட்டுகள்     என்றும்   குற்றஞ்சாட்டப்படுவதன்   நோக்கம்   தெரியவில்லை   என்றும்”  கூறிய   அந்நிறுவனம்   குற்றச்சாட்டுகளுக்கு   எதிராக  தன்னைத்  தற்காத்துக்கொள்ள  முழுமூச்சாக  போராடப்போவதாகக்  கூறியது.

இந்தியாவில்   அனைத்துலக  அளவில் விமானங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உள்நாட்டில் விமானங்களை இயக்கி இருக்க வேண்டும். அத்துடன் 20 விமானங்கள் இருக்க வேண்டும்.

5/20 என்ற இந்த  விதிமுறையை   மீறியதாகவும் அதேபோல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய (எப்ஐபிபி) விதிமுறைகளை மீறியதாகவும் பெர்னாண்டஸ்மீது   வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக   டைம்ஸ்  அப்  இந்தியா  கூறியது.