ரஃபிசியின் 18 மாத சிறைத்தண்டனை இரத்து செய்யப்பட்டது

1எம்டிபி குறித்த அட்டார்னி ஜெனரல்ஸ் சேம்பர்ஸ் அறிக்கையின் ஒரு பகுதியை வெளியிட்டதற்காக விதிக்கப்பட்ட 18 மாதச் சிறைத்தண்டனையில் இருந்து, ரஃபிசியை மேல்முறையீட்டு நீதிமன்றம் விலக்கியது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறை தண்டனை ஈராண்டு நன்நடத்தைப் பத்திரமாக மாற்றப்படுகிறது என்று கூறினார்.

டிசம்பர் 6, 2017-ல், நீதிபதி அஸ்மான் அப்துல்லா 1எம்டிபி அறிக்கையின் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது தொடர்பிலான குற்றச்சாட்டிலிருந்து ரஃபிசியின் தண்டனையை ஒதுக்கி வைத்தார், ஆனால், 2016 மார்ச் மாதத்தில், ஒரு பத்திரிகையாளர் மாநாட்டின் வழி மக்களுக்கு அதன் உள்ளடக்கத்தை வெளியிட்டதற்கான தண்டனையை உறுதி செய்தார்.

அவ்வறிக்கை வெளியிட்டதற்காக, அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் 18 மாத சிறைத் தண்டனை ரஃபிசிக்கு வழங்கப்பட்டது.

மேல்முறையீடு செய்யப்பட்டபோது, ரஃபிசியின் வழக்கறிஞர், அஹ்மாட் நிஜாம் ஹமீத் 18 மாத சிறை தண்டனை “அதிகப்படியானது” எனக் குறிப்பிட்டார்.

“எனது கட்சிக்காரர் (ரஃபிசி) தனிப்பட்ட ஆதாயத்திற்காக அவ்வறிக்கையை வெளியிடவில்லை. நாட்டின் நலன் கருதியே அது வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் இருந்தாலும், நாட்டின் பாதுகாப்புக்கு அது மிரட்டலாக இருக்கவில்லை,” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

“தற்போது, அவ்வறிக்கை பொது மக்களுக்குத் திறக்கப்பட்டுள்ள சூழலில், சிறைத் தண்டனை தேவையில்லை,” என்றும் அவர் கூறினார்.