ஜொகூரையும் சிங்கப்பூரையும் இணைக்கும் ஆர்.டி.எஸ். திட்டம் தொடரும்

ஜொகூர், புக்கிட் சாகார் – சிங்கப்பூர், உட்லண்ட்ஸ் இடையிலான ராபிட் டிரான்சிட் சிஸ்டம் (ஆர்.டி.எஸ்.) திட்டம் தொடருமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.

RM4 பில்லியன் செலவிலான அத்திட்டம், பிராசரானா மலேசிய பெர்ஹாட் (பிராசரானா) நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், கொள்கை அடிப்படையில் அது தொடரும் என்றும், லோக் நேற்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார்.

“இந்தத் திட்டம் ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் காஸ்வேயில் உள்ள நெரிசலைக் குறைக்க உதவும், மேலும் கொள்கையளவில் 2010-ல் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புக்கொண்டது.

“நாங்கள் திட்டத்தைத் தொடருவோம், ஆனால் செயல்முறையை விரைவுபடுத்த, கட்டுமான வழிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்….. ஜூன் 30-ல் கையெழுத்திடப்பட வேண்டிய பிராசரானா மற்றும் ட்ரான்ஸிட் அலிரான் சிங்கப்பூரா (எஸ்.எம்.ஆர்.டி) ஆகியவற்றிற்கு இடையிலான ஒப்பந்தம் உள்ளது. இந்தத் திட்டத்தை மதிப்பிட்டு ஆய்வு செய்ய நேரம் தேவை என்பதால், நாம் காலத்தை நீட்டிக்க கேட்டுக்கொள்வோம், இத்திட்டத்தை நாங்கள் அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்வோம்,” என்று அவர் கூறினார்.

ஜொகூர், புக்கிட் சாகர் முதல் சிங்கப்பூரின் வட உட்லண்ட்ஸ் வரை செயல்படவுள்ள இந்தத் திட்டம், 2024-ல் நிறைவு செய்யப்பட்டால், மணிக்கு 10,000 பயணிகள் வரை பயணிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

-பெர்னாமா