மலேசிய இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு குழு அமைப்பதைத் துரிதப்படுத்த வேண்டுமென, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை மக்கள் நல மற்றும் உரிமை அமைப்பு (பவர்) வலியுறுத்தியுள்ளது.
ஹராப்பான் புதிய அரசாங்கத்தில் இந்தியர்கள் திசையறியாது இருப்பதால், இந்தியர்களுக்கு விசேட குழு அமைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென ‘பவர்’ அமைப்பின் துணைத் தலைவரான எஸ்.சுரேந்திரன் பிரதமர் மகாதிரைக் கேட்டுக்கொண்டார்.
“இந்தியர்கள், குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள், புதிய அரசாங்கத்தைக் கையாள்வதில் சில சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என எனக்கு சில புகார்கள் வந்துள்ளன, நானும் அவற்றை நேரடியாகக் கண்டுள்ளேன்.”
“கடந்த காலத்தில், மஇகா தலைவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்த பின்னர், அவர்கள் உதவ மறுத்துவிட்டனர். மஇகா தலைமையகத்தில் சேவை மையம் நிறுத்தப்பட்டது என்று நான் கேள்விப்பட்டேன்,” என அவர் டெய்லி நியூஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
“இதுதான் மஇகாவின் செயல், தோற்றுவிட்டால் காணாமல் போய்விடுவார்கள், மக்களுக்கு உதவுவதில் தயக்கம் காட்டுவார்கள், மிகவும் சங்கடமாக இருக்கிறது. எனவே, உறுதியளித்தபடி அச்சிறப்புக் குழுவை விரைவில் அமைக்கும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என அவர் மேலும் கூறினார்.
இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஹராப்பான் ஒரு சிறப்புக் குழுவை, பிரதமரின் நேரடிப் பார்வையில் அமைக்கும் என, முன்னதாக டாக்டர் மகாதிர் கூறியிருந்தார்.
“இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்க தயாராக இருக்கும் டாக்டர் மகாதிருக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இருப்பினும், இந்த அமைப்பின் நலன்களை இந்தியர்கள் அனுபவித்து மகிழ்வதற்கு, அதன் உருவாக்கத்தை விரைவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
“முடிந்தால், 100 நாட்களுக்குள், குடியுரிமை ஆவணங்களின் பிரச்சனையை ஹராப்பான் அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனைப் போலவே நல்லொழுக்கம், கல்வி மற்றும் சமூக பிரச்சனை போன்ற மற்ற விஷயங்களும்.
“ஏனென்றால், மொழிப் பிரச்சினைகளால் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர், மேலும் அரசாங்க நடைமுறைகளை அவர்கள் சரிவர அறிந்திருக்கவும் இல்லை,” என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையே, 14-வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பக்காத்தான் ஹராப்பான் எம்.பி.-க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் மக்களின் வசதிக்காக, தங்கள் ‘சேவை மைய’ முகவரியினை விரைவாக பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும் சுரேந்திரன் வலியுறுத்தினார்.
“ஹராப்பானின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேவை மையங்களைத் திறந்துவிட்டனர். இருப்பினும், உள்ளூர் மக்களுக்கு அதன் முகவரி இன்னும் தெரியவில்லை. இப்பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.