ஏஜியாக டோமி மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது

 

மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் மலேசியாவின் சட்டத்துறை தலைவர் (அட்டெர்னி ஜெனரல்/ஏஜி) பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். அப்பதவிக்கு அவரை மட்டுமே பக்கத்தான் ஹரப்பான் தேர்வு செய்துள்ளது.

தோமஸ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரம் மலேசியாகினிடம் கூறிற்று. அவரது பெயர் பேரரசரிடம் ஒரு வாரத்திற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், ஒரு முஸ்லிம் அல்லாதவர் ஏஜியாக நியமிக்கப்படுவது ஏற்புடையதாக இல்லாததால் ஆட்சியாளர்கள் மாநாடு ஒரு முஸ்லிம் வேட்பாளரை விரும்புவதாக தெரிகிறது.

வேறு வேட்பாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற வினாவுக்கு, இல்லை என்று கூறப்படுகிறது.

ஆட்சியாளர்களின் மாநாட்டிடம் தோமஸின் பெயர் மட்டுமே சமர்பிக்கப்பட்டது என்று கூறிய அவ்வட்டாரம், இந்த முன்மொழிதல் குறித்து ஆலோசிக்க ஆட்சியாளர்கள் மாநாட்டிற்கு சற்று அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியது.

தற்போது கட்டாய விடுப்பில் இருக்கும் ஏஜி அபாண்டி அலியின் இடத்தை தோமஸ் நிரப்புவார்.

பதவியிலிருந்து விலக மறுக்கும் ஏஜி அபாண்டி அலி பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கூறினார்.