சட்டத்துறை தலைவராக டோமி தோமஸ் முன்மொழியப்பட்டது பக்கத்தான் தேர்தல் அறிக்கைக்கு முரணானதா?

 

அரசாங்கத்தால் சட்டத்துறை தலைவர் (ஏஜி) பதவிக்கு மூத்த வழக்குரைஞர் டோமி தோமஸ் பெயர் முன்மொழியப்பட்டது பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் அறிக்கைக்கு முரணானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தேர்தல் அறிக்கையில் 15 இல், சட்டத்துறை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படுவர் அதற்கான தகுதியைக் கொண்டிருப்பார். அவர் அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசகராக இருப்பார் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், டோமி தோமஸ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர். அது தடையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே தேர்தல் அறிக்கை 15, அரசு தரப்பு வழக்குரைஞர் பதவியை கட்சி சார்பற்ற சுயேட்சையான ஒருவர் வகிக்கலாம் என்று கூறுகிறது.

மேலும், அவர் மலேசியாவின் அரசு தரப்பு வழக்குரைஞர் அலுவலகத்திற்கு தலைமை ஏற்பார் என்றும் கூறுகிறது.

தற்போது, ஏஜி அரசு தரப்பு வழக்குரைஞராகவும் செயல்படுகிறார். இவ்விரண்டு பொறுப்புகளை வெவ்வேறாக பிரிக்க வேண்டும் என்று தேர்தல் அறிக்கை 15 இல் கூறப்பட்டுள்ளது.

டோமி தோமஸ் ஏஜியாக நியமிக்கப்பட ஒரு வாரத்திற்கு முன்பு முன்மொழியப்பட்டார்.