அமானா : ஏஜி-ஆக டோமி தோமஸ் நியமிக்கப்படுவது, மலாய்க்காரர்களையும் இஸ்லாத்தையும் பாதிக்காது

சட்டத்துறை தலைவராக டோமி தோமஸ் நியமிக்கப்படுவதை, அமானா இளைஞர் பிரிவு ஆதரிக்கிறது.

இளைஞர் பிரிவின் தலைவர், ஃபாயிஸ் ஃபட்ஷில், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், டோமி தோமஸின் நியமனம் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாத்தைப் பாதிக்காது எனக் கூறியுள்ளார்.

“இஸ்லாம் அல்லாத ஒருவர், நாட்டின் சட்டத்துறை தலைவராக பதவியேற்பதால், இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களின் சிறப்புரிமை பாதிக்கப்படும் என்பது தவறான கண்ணோட்டம். காரணம், அவை சட்டரீதியானவை, சட்டத்துறை தலைவருக்கு அதில் மாற்றம் செய்ய அதிகாரம் இல்லை,” என அவர் கூறினார்.

ஆட்சியாளர்கள் சபை, அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததாகவும் சட்டத்துறை தலைவராக ஓர் இஸ்லாமியரை நியமிக்கும்படி வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

இருப்பினும், டோமியைத் தவிர அரசாங்கம் இதுவரை வேறு யாரின் பெயரையும் முன்மொழியவில்லை.

ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல, டோமி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல, எனினும், அவரைச் செனட்டராக நியமித்து, சட்டத்துறை தலைவராகப் பதவியில் அமர்த்தலாம் என்றும் ஃபாயிஸ் ஆலோசனைக் கூறியுள்ளார்.

டோமி தகுதியானவர், மேலும் பல சிக்கலான உயர்மட்ட வழக்குகளை கையாள்வதில் மூத்த வழக்கறிஞரின் அனுபவத்தை அவர் கொண்டுள்ளார் எனவும் ஃபாயிஸ் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.