ஏஜியாக டோமி தோமஸ், அரசாங்கம் உறுதியாக உள்ளது

யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஒப்புதலைப் பெறாதப் போதிலும், சட்டத்துறை தலைவராக வேறு யாரின் பெயரையும் முன்மொழியப் போவதில்லை என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் இன்று தெரிவித்தார்.

தேசிய சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்கவே டோமியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது என அரசாங்கம் நம்புகிறது என துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்தார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அகோங் பிரதமரின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டுதான் (ஒரு சட்டத்துறை தலைவரை நியமிக்க வேண்டும்) செயல்பட வேண்டும்.

“எனவே, நாம் அந்த கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்,” என்று அவர், இன்று பிற்பகல் ஆலோர் ஸ்டாரில், ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, அதைப் பற்றி மேலும் விளக்கிக்கொண்டிருப்பதில் “எந்த நன்மையும் இல்லை” என்றார் அவர்.

நிதி அமைச்சர் லிம் குவான் எங் உடனான உறவு காரணமாக, டோமி சட்டத்துறை தலைவர் பதவிக்குப் பொருந்தவில்லை என்ற சிலரின் கருத்துபற்றி கேட்டபோது, அந்த வழக்கறிஞர் வேறு பலருக்காகவும் தனது கடமைகளைச் செய்துள்ளார் என்றார் டாக்டர் மகாதிர்.

“வழக்கறிஞர்கள் (வழக்கமாக) அவர்களுக்கு வருமானத்தை வழங்கும் ஒரு வழக்கை எடுத்துக் கொள்வார்கள்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, சட்டத்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, மலாய் ஆட்சியாளர்கள் எதிர்வரும் செவ்வாயன்று விசேட கலந்துரையாடலை நடத்த உள்ளதாக அரச முத்திரைக் காப்பாளர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.