அம்னோவுக்குப் புத்துயிர் அளிக்க வழி உண்டு, அதை ஜோகூர் முன்னாள் மந்திரி புசார் கட்சித் தேர்தலுக்குமுன் வெளியிடுவார்

மே  9   பொதுத்   தேர்தலில்   கூட்டரசு   நிலையில்  அதிகாரத்தைப்   பறிகொடுத்த    அம்னோ   அது  தோற்றுவிக்கப்பட்ட    மாநிலமான  ஜோகூரையும்  இழந்தது  பரிதாபமானது.

ஜோகூரைத்   தோற்றாலும்    ஜோகூரின்   முன்னாள்   மந்திரி   புசார்   காலிட்  நோர்டின்   தோல்வியால்   சோர்ந்து  விடவில்லை.    கட்சித்   தேர்தலில்   அம்னோ   உதவித்    தலைவர்    பதவியில்  குதிக்க   முடிவு    செய்துள்ளார்.

அதற்கு  ஒரு  காரணம்   உண்டு.  அம்னோவைத்   திரும்பவும்  தூக்கி   நிறுத்தும்   திட்டம்   வைத்திருப்பதாகக்   கூறினார்.

“கட்சிக்குப்   புத்துயிர்   அளிக்க  பல   பரிந்துரைகள்   உண்டு   என்னிடம்.  அடுத்த  சில   நாள்களில்     அவற்றை    வெளியிடுவேன்.

“பலரும்   அம்னோவுக்கு   மாற்றங்கள்  தேவை   என்கிறார்கள்.  ஆனால்,   எப்படி  மாற்றங்களைச்  செய்வது   என்பதை   எவரும்  சொன்னதில்லை.

“மாற்றங்களைச்   செய்வது   எப்படி   என்பதைத்  தேர்தலுக்கு   முன்னதாக     விவரமாக  விளக்குவேன்”,   என  இன்று  பாசிர்   கூடாங்கில்   மாநில    அம்னோ    தலைமையகத்தில்    காலிட்   கூறினார்.

பதவிக்காகவோ,  பகட்டுக்காகவோ   கட்சித்  தேர்தலில்   குதிக்கவில்லை    என்று  கூறிய   காலிட்,    அம்னோவை   மீண்டும்   நிமிர்ந்து   நிற்க   வைக்க   வேண்டும்  என்பதற்காகத்தான்   போட்டியிடுவதாகக்   கூறினார்.