புலாவ் பத்து பூத்தே : அரசாங்கம் மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றது தவறு

சர்வதேச நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே.) இருக்கும், புலாவ் பத்து பூத்தே வழக்கின் மேல் முறையீட்டைத் தொடர வேண்டும் என, பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஜொகூர் பிகேஆர் தலைவருமான அவர், அந்தத் தீவு ஜொகூர் மற்றும் மலேசியாவின் உரிமை, என முன்னாள் மந்திரி பெசார் காலிட் நோர்டினைப் போலவே கூறியுள்ளார்.

“அண்மையில், மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டுமென பிரதமர் எடுத்த முடிவு, ஒரு பெரிய தவறு ஆகும். புதிய சான்றுகள் இருப்பதால் விசாரணையைத் தொடர வேண்டும்.

“ஐ.சி.ஜே.-யில் அந்த மேல்முறையீட்டு மனுவைத் தொடர வேண்டுமென, நான் துன் டாக்டர் மகாதிர் முகமட் தலைமையிலான அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்சினை சமரசம் செய்யப்படக்கூடாது என்று அவர் கூறினார்.

மே 30, பெர்னாமா செய்திகளின்படி, புலாவ் பத்து பூத்தே, பத்துவான் தெங்கா மற்றும் துபீர் செலாத்தான் சம்பந்தப்பட்ட 2008 அசல் தீர்ப்பு தொடர்பாக மலேசியா சமர்பித்த வழக்கு இனி தொடரப்படாது என ஐ.சி.ஜே. தங்கள் அரசாங்கத்திடம் அறிவித்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜொகூர் பிஎன் தலைவருமான காலிட், அம்முடிவு குறித்த மாநில அரசின் நிலைப்பாட்டைக் கேட்டிருந்தார்.

வலுவான காரணங்கள் இல்லாத சூழலில், சட்டத்துறை தலைவர் ஓய்வில் இருக்கும் தருவாயில், இப்படிபட்ட ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதை அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், ம.சீ.ச. துணைத் தலைவர் வீ கா சியோங், அம்முடிவு குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வழங்கும்படி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

2017-ஆம் ஆண்டில் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அறிவித்த புதிய ஆதாரங்களை – ஐக்கிய நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இருக்கும் மூன்று வரலாற்று ஆவணங்களை – ஏன் வெறுமனே தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

“உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள பெரும்பாலான தகவல்கள், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கைகளையே மேற்கோள் காட்டியுள்ளன. புதிய அரசாங்கம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

“வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்படவில்லை என்றாலும், நாட்டின் இறையாண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே அரசாங்கம் அமைதியாக இருக்கக்கூடாது,” என்று ஆயேர் ஈத்தாம் எம்.பி.யுமான அவர் தெரிவித்தார்.