மே 9 பொதுத் தேர்தலில் அம்னோவின் வீழ்ச்சிக்குக் காரணம் உட்பூசல்தான் என்கிறார் அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்.
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக வாக்காளர்கள் கொண்டிருந்த கோபத்தைக் காட்டிலும் உள்சண்டைதான் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று நஸ்ரி தெரிவித்ததாக த மலேசியன் இன்சைட்(டிஎம்ஐ) கூறியது.
“உண்மையான காரணத்தை அறுதியிட்டுக் கூற முடியாதுதான். அதற்குச் சரியான ஆய்வுகள் செய்து முடிக்கப்படும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால், எங்கெல்லாம் உள்பூசல் நிலவியதோ அங்கெல்லாம் அம்னோ தோற்றுப்போனதாகவே நான் நினைக்கிறேன்”, என்றாரவர்.
இந்த உள்பூசல்தான் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கட்சிக்கு எதிராக செயல்பட வைத்தது என்று பாடாங் ரெங்காஸ் எம்பி கூறினார்.
“அம்னோ இவ்வளவு மோசமாக தோல்வி அடையும் என்பதை நான் எதிரபார்க்கவே இல்லை. உள்பூசல் இதற்குக் காரணம் என்பேன். வேறு என்ன காரணத்தைக் கூற முடியும்? நானும் தோல்வியுற்றிருக்க வேண்டும். என் தொகுதி ஒன்றுபட்டிருந்ததால் வென்றேன்”, என்றாரவர்.
திரெங்கானு பறிபோனதைக் குறிப்பிட்ட நஸ்ரி, “மந்திரி புசார் தெரிவுசெய்த வேட்பாளர்கள்மீது கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நம்பிக்கை வரவில்லை”, என்றார்.