விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹூடின் அயூப், அவருடைய அமைச்சின் ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுத்தபடமாட்டார்கள் என்று உறுதியளித்தார்.
மாறாக, மக்கள் மற்றும் நாட்டிற்கு, தங்கள் சேவையை ஆற்ற அவர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்றார்.
“அரசாங்க அதிகாரிகளுக்குத் தங்கள் கடமைகளை நிறைவேற்ற சுதந்திரம் கொடுப்பதன் மூலம், அவர்களின் கௌரவம் காக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன், அவர்களின் கௌரவம் பாதிக்கும் அளவிற்கு, அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருப்பதை நான் உறுதி செய்வேன்.
“அரசாங்க அதிகாரிகள் அடிமைகளாக (அரசியல்) நடத்தப்பட மாட்டார்கள்… அது விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சில் நடக்காது,” என்று கிளாந்தான், கோத்தா பாருவில், இன்று விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.
பிஎன் நிர்வாகத்தின் போது, ஆளுங்கட்சி சார்பில் அரசாங்க ஊழியர்கள் பதவிகளைத் தவறாக பயன்படுத்துவதாக வாதங்கள் நடந்ததுண்டு, சிலர் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜூன் 1-ம் திகதி, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், அரசாங்கத்தின் மீதான பல பொது ஊழியர்களின் விசுவாசத்தைக் கேள்விக்குட்படுத்தினார், குறிப்பாக கடந்த பொதுத் தேர்தலில் பிஎன்னுக்குப் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தவர்களை.
உண்மையில், மகாதிர் மே 21 அன்று, பிரதமர் துறை இலாகாவின் தனது முதல் உரையில், அரசாங்கத்துடன் அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு பற்றி பேசியுள்ளார்.
அமானாவின் துணைத் தலைவருமான சலாஹுடின், அரசு ஊழியர்கள் அரசியலில் இருந்து விலகியிருப்பது, அவர்களின் கடமைகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவதற்கு உதவும் என்று நம்புவதாகக் கூறினார்.
“கட்சி உடையை அணிந்துகொண்டு, நீங்கள் எனக்கு உதவுவதை நான் விரும்பவில்லை. இரவு நான் அரசியல் பேசும்போது, என்னுடன் நீங்கள் வரத்தேவையில்லை, என்னை ஆதரிக்க நினைத்தால், அமைதியாக ஆதரியுங்கள், அதைதான் நான் விரும்புகிறேன்.
“அதே நேரத்தில், அமைச்சின் ஊழியர்களாக நாம் வேலை செய்வோம், அரசு ஊழியர்கள் என்ற முறையில் ஊதியம் பெற்று, நம் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் உணவு கொடுப்போம்,” என்று அவர் கூறினார்.