முடியாட்சியை நிராகரிக்கவில்லை, அவர்களை மக்களின் கோபத்திற்காளாகமல் பாதுகாக்கிறேன், மகாதிர் கூறுகிறார்

சில தரப்பினர் கூறுவது போல தாம் முடியாட்சியை நிராகரிக்கவில்லை என்று பிரதமர் மகாதிர் விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புரட்சியில் இறங்கிவிடும் அளவிற்கு ஆட்சியாளர்கள் மக்களுக்கு சினமூட்டாமல் இருப்பதைத் தடுப்பதே தமது நடவடிக்கைகளின் நோக்கம் என்று பிரதமர் சினார் ஹரியானுக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

“நாம் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் விரும்பாதவற்றில் ஆட்சியாளர்கள் சம்பந்தப்படக்கூடாது. மக்களிடம் அதிகாரம் இல்லை. ஆனால், அவர்கள் ஆத்திரமடைந்தால், அவர்கள் புரட்சியில் ஈடுபடுவார்கள். அது நடக்க விடக்கூடாது.

“ஆகவே, ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் தகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் தவறு ஏதேனும் செய்தால் அவர்களைப் பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்”, என்று மகாதிர் கூறினார்.

ஆட்சியாளர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க சட்டத்தைத் திருத்துவதும் இதில் அடங்கும் என்றாரவர்.

1993 இல், நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டம் பிரிவு 182-ஐ திருத்தியது. அதன் மூலம் மலாய் ஆட்சியாளர்களின் விதிவிலக்கு அகற்றப்பட்டது.

ஆட்சியாளர்கள் அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்

மகாதிர் பிரதமராக இரண்டாவது முறை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் பற்றி குறிப்பிட்ட மகாதிர், அது போன்றவை நடந்திருக்கக்கூடாது. ஆட்சியாளர்கள் சட்ட ஆளுமை மற்றும் அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

“அது போன்றவை நடந்திருக்கக்கூடாது. நமக்கு சட்டங்கள் இருக்கின்றனர். நமக்கு அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. நாம் சட்ட ஆளுமையைப் பின்பற்ற வேண்டும். நாம் சட்ட ஆளுமைக்குத் திரும்ப வேண்டும். நடந்த ஒன்று சட்டத்திற்கு எதிரானது என்று கருதப்பட்டால், அது சினமூட்டும்.

“ஆனால், பெரும்பாலான ஆட்சியாளர்கள் மற்றும் யாங்-டி பெர்த்துவான் அதை உணர்ந்துள்ளனர், ஏனென்றால் அவர்கள் சட்டத்தைப் பின்பற்ற முயல்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்.

“உண்மையில், பதவிப் பிரமாணம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை பெரும்பாலான ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களில் சிலர் என்னைச் சந்தித்தினர், சிலர் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தினர், எனது பதவிப் பிரமாணம் மற்றும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) நியமனப் பிரச்சனை உட்பட. மற்றும் இந்தப் பிரச்சனையை ஆட்சியாளர்களே தீர்த்து வைத்தனர்’, என்று மகாதிர் மேலும் கூறினார்.