பேராக் மந்திரி புசார் அஹமட் பைசல் அஸுமு, முன்னாள் அம்னோ சட்டமன்ற உறுப்பினரான சைனோல் பாட்ஸி பஹாருடினை தமக்கு ஆலோசகராக நியமனம் செய்திருப்பதற்குத் தக்க விளக்கமளிக்கத் தவறினால் பேராக் செயலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக Otai Reformis எச்சரித்துள்ளது. Otai Reformis அன்வார் இப்ராகிமின் தீவிர ஆதரவாளர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும்.
“ஆட்சிமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒப்பான மந்திரி புசாரின் ஆலோசகராக சைனோல் நியமிக்கப்பட்டிருப்பதையும் அதேபோல் மற்ற அம்னோ/பின் தலைவர்கள் வேறு பணிகளுக்கு நியமிக்கப்படுவதையும் கண்டிக்கிறோம்.
“இதற்காகவா அம்னோ/பிஎன்னை எதிர்த்துப் போராடி வந்தோம்? ஏன் நியமனம் செய்யப்பட்டது என்பதை ஒரு வாரத்துக்குள் மந்திரி புசார் விளக்கியாக வேண்டும்.
“விளக்கமளிக்காவிட்டால் பேராக் Otai Reformis பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்களைத் திரட்டி மாநிலச் செயலகத்துக்குமுன் ஆர்ப்பாட்டம் செய்யும்”.
சைனோல் நியமனம் தொடர்பில் பைசலுடன் “நேருக்கு நேர்” பேச்சுகள் தேவை என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சுங்கை மானிக் சட்டமன்ற உறுப்பினரான சைனோல், பேராக்கில் ஹரப்பான் அரசு அமைக்க பைசலுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவர் பெர்சத்துவில் சேர்ந்து மந்திரி புசாரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.