கடந்தாண்டு ஜூலை 19-ம் தேதி, மலேசிய தேசிய வங்கியில் 12 ஆண்டுகளாக மேலாளராக இருந்த கோகிலா பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அதற்கு பேங்க் நெகாரா கூறிய காரணம், மே 1, 2016 தொழிலாளர் தினத்தன்று நடந்த ஒரு பேரணியில், ‘பாதால் ஜிஎஸ்டி’ (ஜிஎஸ்டி-யை ஒழிப்போம்) எனும் டி-சட்டையை கோகிலா அணிந்திருந்தார் என்பதுதான்.
பணி நீக்கம் செய்யப்பட்ட கோகிலாவுக்கு, தனது உடமைகளை எடுத்துகொண்டு, பேங்க் நெகாரா கட்டடத்திலிருந்து வெளியேற கொடுக்கப்பட்ட அவகாசம் 1 மணி நேரம் மட்டுமே. வேலை நீக்கம் செய்யப்பட்டது மற்றும் அலுவலகத்தைவிட்டு வெளியெற வேண்டுமென, முன்னதாக அவருக்கு எந்தவொரு நோட்டிஸ்-உம் வழங்கப்படவில்லை.
பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்த மறுநொடியில் இருந்து, கோகிலாவின் அனைத்து நடவடிக்கைகளும் உதவி போலிசாரால் கண்காணிக்கப்பட்டது. 12 ஆண்டுகால சேவையின் போது, நிரப்பப்பட்ட அனைத்து நினைவுப் பொருட்களும், ஒருவர் கண்காணிப்பின் கீழ், அவசர அவசரமாக எடுத்துவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோகிலா பேங்க் நெகாரா வளாகத்திலிருந்து ஒரு குற்றவாளியைப் போல வெளியேற்றப்பட்டார்.
அதன்பின்னர், முகமட் இப்ராஹிம்மிடம் மேல்முறையீட்டு கடிதம் கொடுக்கச் சென்றபோது, பேங்க் நெகாரா வளாகத்திற்குள் நுழைய கோகிலா அனுமதிக்கப்படவில்லை. பேங்க் நெகாரா கோகிலாவின் புகைப்படங்களை, அனைத்து உதவி போலிஸ்காரர்களுக்கும் அனுப்பி, கோகிலா பேங்க் நெகாராவுக்குள் நுழைவதைத் தடுக்க சிறப்பு கட்டளைகளை வழங்கி இருந்தது.
சிறிதுநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கோகிலா 2 உதவி காவலர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளே அனுமதிக்கப்பட்டார். 45 நிமிடங்களுக்குப் பின், முஹம்மது இப்ராஹிமின் தனிப்பட்ட உதவியாளர், கோகிலாவின் மேல் முறையீட்டு கடிதத்தை எடுத்துக் கொண்டார். இருப்பினும், பேங்க் நெகாராவின் அந்த முன்னாள் ஆளுநர் கோகிலாவின் வேண்டுகோளை எந்தவொரு காரணமும் கூறாமல் தள்ளுபடி செய்தார்.
தற்போது, பிரதமர் மகாதிரின் தலைமையிலான புதிய அரசாங்கம் ஜிஎஸ்டி-யைத் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் 1 முதல், ஜிஎஸ்டி 0%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முகமட் இப்ராஹிம் கடந்த ஜூன் 8-ம் தேதி முதல், தனது பதவியிலிருந்து விலகிவிட்டார்.
இருப்பினும், பொது விடுமுறை தினத்தில், ‘ஜிஎஸ்டி-யை ஒழிக்க வேண்டும்’ எனும் வாசகம் கொண்ட டி-சட்டையை அணிந்து, தனது உரிமையைக் கடைபிடித்தற்காக, கோகிலா பதவி நீக்கம் செய்யப்பட்டார். கோகிலாவின் பதவி நீக்கம் சட்டத்தின் எந்த விதிமுறைகளுடனும் பொருந்தவில்லை.
அதுமட்டுமின்றி, பேங்க் நெகாராவின் இந்நடவடிக்கையானது, கோகிலாவின் உரிமை மட்டுமின்றி, பொதுவாக மலேசியத் தொழிலாளர்கள் அனைவரின் அடிப்படை உரிமைகளையும் மீறியுள்ளதையே காட்டுகிறது.
அதன் அடிப்படையில், எதிர்வரும் ஜூன் 11-ம் தேதி, காலை மணி 11-க்கு, புத்ரா ஜெயாவில் இருக்கும் பிரதமர் அலுவலகத்தில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அணி (ஜெரிட்) இணைந்து ஒரு கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் கையளிக்கவுள்ளது. அக்கோரிக்கை மனுவில், கோகிலாவை பேங்க் நெகாரா மீண்டும் பணியில் அமர்த்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
#ஜஸ்டிஸ்ஃபோர்கோகிலா
கோரிக்கையை முன் வையுங்கள்.