கிட் சியாங்: 1998 மக்கள் எழுச்சி மீண்டும் நிகழாது

டிஏபி    பெருந்  தலைவர்     லிம்  கிட்   சியாங்,   1998-இல்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்   பிரதமராகவும்   அன்வார்   இப்ராகிம்   துணைப்  பிரதமராகவும்    இருந்தபோது   நிகழ்ந்த   மக்கள்    எழுச்சி  போன்று    மீண்டும்  ஒன்று   நிகழ  வாய்ப்பில்லை    என்று   நம்புகிறார்.

கடந்த   20  ஆண்டுகளில்தான்   எத்தனை  மாற்றங்கள்.  அத்தனையும்    நல்லதுக்கென்றே     தோன்றுகிறது    என்றாரவர்.

“எல்லாருமே  மாறி  இருக்கிறோம்.  மகாதிர்,   அன்வார்,  பக்கத்தான்   ஹரப்பான்   தலைவர்கள்    எல்லாருமே   சிறந்த   மலேசியத்     தலைவர்களாக  விளங்க    நல்ல  மனிதர்களாக  இருத்தல்    அவசியம்    என்ற   வாழ்க்கைப்  பாடத்தை  உணர்ந்து  கொண்டிருக்கிறார்கள்”,   என   மலேசியன்  இன்சைட்    நேர்காணலில்   லிம்   கூறினார்.

மகாதிர்  பிரதமராக   இருப்பதாலும்   அவருக்குப்  பின்   அன்வார்  இப்ராகிம்   அப்பதவியை  ஏற்பார்    என்பதாலும்   1998  எழுச்சி   மீண்டும்   நிகழும்    சாத்தியம்   உண்டா     என்று   வினவப்பட்டதற்கு   லிம்    அவ்வாறு    கூறினார்.

அம்னோவில்   பிரதமராகவும்   துணைப்பிரதமராகவும்   இருந்தபோதுகூட,  வெளிப்பார்வைக்கு   ஒத்துழைப்பதுபோல்    காணப்பட்டாலும்    மகாதிருக்கும்   அன்வாருக்குமிடையில்   உள்ளுக்குள்  பிரச்னைகள்   கனன்று  கொண்டிருந்தன.  பின்னர்  ஒரு  நாளில்   அது  கடும்  மோதலாக   வெளிப்பட்டு   அன்வார்   பதவிநீக்கம்    செய்யப்பட்டுச்  சிறைக்கு   அனுப்பப்பட்டார்.

இப்போது   பக்கத்தான்   ஹரப்பானில்   எல்லாமே   நன்றாகவே   உள்ளன   என்று   இருவருமே   கூறிக்கொண்டிருந்தாலும்   கடந்தகால   மனக்  கசப்புகளை     வைத்துப்   பார்க்கும்போது  மகாதிர்   அவ்வளவு   எளிதில்   அன்வாருக்கு   இடத்தை  விட்டுக்   கொடுப்பாரா     என்ற  ஐயப்பாடு   எழாமலில்லை.

அண்மையில்   சினார்  ஹரியானுக்கு    வழங்கிய   நேர்காணலில்கூட    நாட்டின்   எட்டாவது   பிரதமர்   அன்வார்  இப்ராகிம்தான்    என்பதை   மகாதிர்   வலியுறுத்தி  இருந்தது   குறிப்பிடத்தக்கது.

இப்போது   இருப்பவர்    பழைய   மகாதிர்    அல்ல   என்று  லிம்   திடமாக   நம்புகிறார்.

“இன்றைய    மகாதிர்  1981  தொடங்கி 2003 வரை   22  ஆண்டுகள்  பிரதமராக   இருந்த  அந்த   மகாதிரிலிருந்து   மாறுபட்டவர்.

“மற்றவர்கள்மீது   தம்   கருத்து  திணிப்பவராக  இருந்த    நிலைமாறி   ஒருமித்த   கருத்தை  உருவாக்க  முயல்பவராக    உருவாகியுள்ளார்.

“மகாதிர்  மற்றும்   ஹரப்பானின்கீழ்  மலேசியா   நல்லவர்களின்  கைகளில்   உள்ளதாகவே    நம்புகிறேன்”,  என்று   லிம்   கூறினார்.