1எம்டிபி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றஞ்சாட்ட புதிய சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ருக்குப் போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்கிறார் மூத்த வழக்குரைஞர் கோபால் ஸ்ரீராம்.
நஜிப்புக்கு எதிராக 2015-இலேயே குற்றப்பத்திரிகை தயாராகி விட்டதாகக் கூறப்பட்டாலும் நஜிப் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் ஏஜி முகம்மட் அபாண்டி அலி அறிவித்திருப்பதையும் கவனிக்க வேண்டும் என்பதை ஸ்ரீராம் ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
“நஜிப்பிடம் புதிதாக வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதால் கைவசமுள்ள புதிய ஆதாரங்களை மறுபரிசீலனை செய்ய புதிய ஏஜிக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்”, என்று முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூறினார்.
நஜிப்மீது வழக்கு தொடுப்பதற்குமுன் அரசாங்கம் வலுவான ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருப்பதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் விளக்கமளித்திருப்பது குறித்துக் கருத்துரைக்கையில் ஸ்ரீராம் இவ்வாறு கூறினார்.