நடந்து முடிந்த நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தில் போட்டியிட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர்கள் அனைவரும் தோல்விகண்ட போதிலும், கட்சியின் அரசியல் சமூக நல போராட்டங்கள் எந்நிலையிலும் பாதிப்படையாமல், தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என நேற்று கூடிய கட்சியின் மாநிலத் தொடர்புக் குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதாக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.
இத்தேர்தலில், தேசிய முன்னணியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்களின் அரசியல் முதிர்ச்சியினை பி.எஸ்.எம். பெரிதும் பாராட்டுவதோடு, புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக குணசேகரன் தெரிவித்தார்.
நேற்று, பொதுத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் கூடிய அக்கூட்டத்தில் கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்ததோடு, மீண்டும் எவ்வாறு மாநில நிலையில் கட்சியினை விரிவாக்கம் செய்யலாம் எனவும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சனைகளைப், புதிய மாநில அரசாங்கத்திடம் கொண்டும்செல்லும் அணுகு முறைகளும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அடுத்த மாதம் ஜூலை 13,14 மற்றும் 15-ம் தேதிகளில், பேராக், ஈப்போவில் நடைபெறவிருக்கும் கட்சியின் தேசிய நிலையிலான மாநாட்டின் ஏற்பாடுகள் பற்றியும் கூட்டத்தில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது என்றார் அவர்.
“தேசிய அரசியல் அலையின் மாற்றத்தினால் தேர்தல் முடிவுகள் கட்சிக்குப் பாதகமாக அமைந்துவிட்ட போதிலும், அறுபது ஆண்டுகால தேசிய முன்னணியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற பி.எஸ்.எம்.-இன் போராட்டமும் ஆட்சி மாற்றத்தின் வழியாக நிறைவேறியுள்ளதில், எங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது,” என்றார் வழக்கறிஞருமான குணசேகரன்.
பேராக் மாநிலத்தில் பி.எஸ்.எம் கட்சியின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் தேர்ந்தெடுக்கப்படாது போனாலும், மாநில அரசின் ஒவ்வொரு திட்டங்களும் கொள்கைகளும் கண்காணிக்கும் சிறப்பு குழுக்கள் அமைக்கவிருப்பதாகவும் சேகர் தெரிவித்தார்.
“பேராக் மாநில நிலையில், பி.எஸ்.எம். மாநிலச் செயற்குழு அலுவலகம் ஒன்றைத் திறக்கவும் நேற்று பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இவையாவும் கூடிய விரைவில் செயல்வடிவம் காணும்,” என குணசேகரன் சொன்னார்.
நேற்றைய மாநிலத் தொடர்புகுழு கூட்டத்தில், சுங்கை சிப்புட் முன்னாள் எம்பி டாக்டர் ஜெயக்குமார், கட்சியின் தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதி, தேசியத் துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பவாணி, மோகனராணி மற்றும் பி.எஸ்.எம். பேராக் வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?