தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்கு, தனக்கு அறிமுகமான தரப்பினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இருந்து விலகிக்கொள்ளவிருப்பதாக, சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் உறுதியளித்துள்ளதாக மலேசிய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மலேசியப் பார் கவுன்சில் தலைவர் ஜோர்ஜ் வர்கிஸ், அத்தகைய நிலைமை ஏற்பட்டால், சட்டத்துறை தலைவராக செயல்பட, தேசிய வழக்குரைஞருக்குச் சட்டம் அனுமதி அளித்துள்ளது என்றார்.
“தனியார் துறை சட்ட வல்லுநராக இருந்தபோது, தனக்கு அறிமுகமான நபர்களின் வழக்குகளில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின், உடனடியாக அவ்வழக்குகளில் இருந்து விலக்கிக்கொள்வதாக ஏஜி உறுதியளித்துள்ளார்,” என்று புத்ராஜெயா, சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில், தோமஸ்-ஐ சந்தித்த பின்னர், நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தோமஸ், 66, முகம்மது அபான்டி அலிக்குப் பதிலாக, ஏஜி பொறுப்பிற்குப் பார் கவுன்சிலில் இருந்து, நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் வழக்கறிஞர் ஆவார்.
சட்டத் துறையில், அவருக்கு 40 ஆண்டுகால அனுபவம் உள்ளது.
தேசியச் சட்ட உதவி அறக்கட்டளை மற்றும் சட்ட உதவி இலாகா இரண்டையும் இணைத்து, அரசாங்கத்தால் சட்டபூர்வமாக ஒழுங்குபடுத்தப்பட்டு, சட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தையும் தோமஸ்-இடம் மலேசிய பார் கவுன்சில் முன்வைத்ததாக வர்கிஸ் கூறினார்.
நாட்டின் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில், கே.சி. வோரா தலைமையிலான நிறுவன சீர்திருத்தக் குழுவிடம், 55 திட்டங்களைப் பார் கவுன்சில் சமர்ப்பித்ததாகவும் அவர் சொன்னார்.
“அவற்றுள், 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், குற்ற தடுப்பு சட்டம் (POCA) மற்றும் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) (Sosma) சட்டம் 2012 போன்ற அடக்குமுறைச் சட்டங்களை இரத்துசெய்வதும் அகற்றுவதும் அடங்கும். அதன் மேல் விவரங்கள் நாங்கள் அக்குழுவிற்குச் சமர்ப்பித்த குறிப்பாடலில் அடங்கியுள்ளன,” என்றார் அவர்.
“புதிய சட்டங்களை ஆராய்வதற்கும் நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரைக்க சில சட்டங்களில் திருத்தம் செய்யவும், சுதந்திரமான சட்ட ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டுமெனவும் நாங்கள் முன்மொழிந்துள்ளோம். நாங்கள் அவ்வப்போது அதன் விவரங்களை வழங்குவோம்,” என்றும் அவர் கூறினார்.