பாகாங் அரசப் பேராளர் தெங்கு அப்துல்லா சுல்தான் அஹமட் ஷா, ஒரு திட்டத்தில் “உதவியதற்காக” ரிம1.3 கையூட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
சைனா ரேய்ன்போ இண்டர்நேசனல் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி (சிஆர்ஐஐசி) அவருக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தமக்கு அந்த நிறுவனத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறாரவர்.
“எனக்கும் சீன நிறுவனத்துக்கும் தொடர்பில்லை. அந்த நிறுவனமே பதிலளித்துள்ளது. நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை”, என்றவர் தம்முடைய ஊடக அதிகாரி மூலமாக பெர்னாமாவுக்குத் தகவல் தெரிவித்திருந்தார்.
தெங்கு அப்துல்லாவுக்கு ரிம1.3 பில்லியன் கையூட்டு கொடுக்கப்பட்டதாகக் கூறும் கடிதமொன்று நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2018, பிப்ரவரி 8 என்று தேதியிடப்பட்ட அக்கடிதத்தில் கையொப்பமிட்டிருப்பவர் சிஆர்ஐஐசி குளோபல் & பசிபிக் நிறுவனத் தலைவர் வில் ஜேடபல்யு டிங் என்று கூறப்பட்டது.
இதனிடையே சிஆர்ஐஐசியும் அக்குற்றச்சாட்டை மறுத்து ஓர் அறிக்கை வெளியிட்டது.
“அது ஒரு பொய்க்கடிதம். அப்படி ஒரு கடிதத்தை சிஆர்ஐஐசி எழுதவே இல்லை. அதன் உள்ளடக்கம் முழுக்க முழுக்க பொய்யாகும். சபூரா- சைனா ரேய்ன்போ கொன்சோர்டியம் என்ற ஒன்று இல்லவே இல்லை”, என்று அது கூறிற்று.
இத்தீயச் செயலுக்குக் காரணமானவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரித்தது.