அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ், மீண்டும் எழுந்து நிற்க முடியாத கட்சிகளுடன் பிஎன்னில் இணைந்திருப்பதைவிட அம்னோ தனித்துச் செயல்படுவதே நல்லது என்கிறார்.
பிஎன் கூட்டணி என்பது “முடிந்துபோன கதை” என நஸ்ரி குறிப்பிட்டதாக ஃப்ரி மலேசியா டுடே இணையச் செய்தித்தளம் கூறிற்று.
“தீவகற்ப மலேசியாவில் தனியாக இருக்கவே விரும்புகிறோம். கெராக்கான் கதையும் முடிந்து விட்டது. அவர்கள் வேண்டுமானால் பிஎன்னை எடுத்துக்கொள்ளட்டும்”, என்றாரவர்.
“பிஎன்னில் கெராக்கானுடனும் மக்களால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்ட மற்ற கட்சிகளுடனும் சேர்ந்திருப்பது ஒரு பெருஞ் சுமை.
“மஇகா, மசீச, கெராக்கான் ஆகியவை மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் அவை எழுந்து நிற்பது முடியாத காரியம்.
“அவற்றால் எழுந்து நிற்கவே முடியாது என்கிறபோது, பிஎன் செயல்படுவது எப்படி?. பிஎன் முடிந்த கதை என்பதை ஏற்கத்தான் வேண்டும்”, என்றார்.
நேற்று கெராக்கான் இளைஞர் தலைவர் எண்டி யோங், பிஎன்னிலிருந்து விலகுவதைவிட அதிலிருந்து அம்னோவை விலக்கி வைப்பது குறித்து முடிவெடுக்க பிஎன் உறுப்புக் கட்சிகள் உச்சமன்றத்தைக் கூட்டி முடிவெடுப்பது நல்லது என்று கூறியிருந்தது பற்றிக் கருத்துரைத்தபோது மேற்கண்டவாறு கூறினார்.
மற்ற கட்சிகள் எல்லாம் சேர்ந்து அம்னோவை விலக்கி வைப்பது குறித்துக் கவலை இல்லை என்று நஸ்ரி கூறினார்.
“அவர்கள் விருப்பம்போல் செய்து கொள்ளட்டும்”, என்றார்.
கூட்டணி இனி எடுபடாது என்பதை பிஎன் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாரவர்.
14வது பொதுத் தேர்தலில் 13 உறுப்புக்கட்சிகளுடன் களமிறங்கிய பிஎன்னில் இப்போது மிஞ்சியிருப்பவை நான்கே நான்கு கட்சிகள்தான்- அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான்.
மே 9 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் 79 இடங்களை வென்ற பிஎன்னிடம், சாபா, சரவாக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகியதை அடுத்து இப்போது கைவசமுள்ள இடங்கள் 57 மட்டுமே.
அம்னோ 54 இடங்களையும் மஇகா இரண்டு இடங்களையும் மசீச ஒரே ஓர் இடத்தையும் வைத்துள்ளன. கெராக்கான் போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை.