கி.சீலதாஸ், ஜூன் 13, 2018.
போர்க்காலத்தின்போது நாட்டின் குடிமக்களாகிய நாம், நமக்கிடையே இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபட்டு, ஒற்றுமைச் சிந்தையோடு பகைவனை எதிர்ப்போம். அப்படிப்பட்ட உணர்வு நம்முள் இருக்கும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும். நம்மிடையே துளிர்விட்ட வேற்றுமை, பகைமை, சந்தேகம், சினம் போன்ற அனைத்தையும் மறந்து நாட்டுப்பற்று மட்டும் ஓங்கிநிற்கும். நம் எதிரியை முறியடிப்பதில்தான் நம் கவனம் எல்லாம்.
நம் நாடு இப்பொழுது எந்த நாட்டுடனும் போர் நிலையில் இல்லை; ஆனால் நம் நாட்டின் தேசியக் கடன் மூன்று டிரிலியனைத் தாண்டிவிட்டது. இது முன்னூறாயிரம் கோடியாகும்.
இந்தக் கடனை ஏற்படுத்தியது யார்? இந்த நாட்டை சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்த அம்னோவின் தலைமையில் இயங்கிய தேசிய முன்னணியாகும். அந்தக் கடனைக் கட்டித் தீர்க்காவிட்டால் நம் நாட்டின் கவுரவம் பாதிப்புறும். நொடிப்பு நிலையை அடைந்துவிடும். இப்படிப்பட்ட சூழலில் நாட்டை, அதன் கவுரவத்தைக் காப்பாற்றும் பொறுப்பு மலேசியர்களாகிய நம்மையே சாரும்.
நல்லெண்ணம் கொண்ட மலேசியர்கள் எந்தவொரு வற்புறுத்தலும் இன்றி தானாகவே முன்வந்து தேசியக் கடனை தீர்ப்பதற்கு வழி கண்டார்கள். அதாவது, தங்களால் இயன்றத் தொகையை நன்கொடையாக வழங்கினார்கள்.
போர்க்காலத்தின்போது மலேசியர்கள் எவ்வாறு நாட்டின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பார்களோ அதே போன்ற தேசியப் பற்றுணர்வு இப்பொழுது பரவுகிறது. மலேசியர்களின் பரம எதிரி முன்னூறாயிரம் கோடி. அந்தக் கடனைத் தீர்ப்பதுதான் நமது போர்முரசாக இருக்கவேண்டும்.
திருடர்கள் கொள்ளையடித்தப் பணத்தை மகிழ நினைப்பார்கள். பணத்தை இழந்தவர்கள் கொள்ளைப்போனதை நினைத்துக் கொண்டிராமல் மேலும் பேரிழப்பு நேராமல் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கவேண்டும். அதைத்தான் மலேசியர்கள் செய்கிறார்கள். கொள்ளை அடித்தவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவர். அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்று கொல்லும் என்பது வாய்மொழி. மக்களை, நாட்டை வஞ்சித்தவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் என்பது ஜனநாயகக் கோட்பாடு என்றால் மிகையாகாது.
207 ஆம் குறளும் இந்த உண்மையத் தெளிவுப்படுத்துகிறது.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
(எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று தப்புவர்; (ஆயினும்) தீவினையாகிய பகை நீங்காது தொடர்ந்து சென்றவிடமெல்லாஞ் சென்று வருத்தும்.)
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் போன்றத் தலைவர்களை மக்கள் அகற்றிவிட்டார்கள். அதே சட்டம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். இதற்கும் மக்களின் மே ஒன்பதாம் தேதி தீர்ப்பு வழி வகுத்தது.
நம்பிக்கை முன்னணி அரசு பொதுமக்களின் நல்ல ஆலோசனைக்கு மதிப்பளித்து, “நம்பிக்கை நீதியை” ஏற்படுத்தியுள்ளது. இதுவரை முப்பது மில்லியன் ரிங்கிட் சேர்ந்துவிட்டதாகச் செய்தி வந்தது. எல்லா மலேசியர்களும் தாராளச் சிந்தையோடு, நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட முயற்சி போற்றத்தக்கது. எக்காலகட்டத்திலும் நாட்டுக்கு ஊறு நேரிடும்போது, இன, சமய பேதம் எதையும் பொருட்படுத்தாமல் நாட்டின் கவுரவத்தில், நலனில் கவனம் செலுத்தும் எல்லா மலேசியர்களும் நாட்டுப்பற்று உடையவர்கள் என்பது தெளிவாகிறது. அவர்களின் நாட்டுப்பற்றை ஒருபோதும் சந்தேகிக்கலாகாது.
மே மாதம் ஒன்பதாம் தேதி ஒரு பெரும் உண்மையை வெளிப்படுத்தியதை மனதில் எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். நாடுதான் முக்கியம், அதன் பாதுகாப்புதான் முக்கியம். ஊழலுக்கு இடமில்லை. நல்லாட்சிக்கு உறுதி அளித்து நம்பிக்கை முன்னணியை ஆட்சி பீடத்தில் அமர்த்திய மலேசிய மக்கள் நாட்டுக்கு ஏற்படவிருந்த ஆபத்தை விலக்கும் வகையில் தானாகவே முன்வந்து நன்கொடை வழங்குவதில் மலேசியாவின் புது சகாப்தத்தில் மக்களின் நேரடிப் பங்கு மெச்சத்தக்கது என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை காலம் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். இந்தப் புது மலேசிய உணர்வு வேரூன்றி வளம் பெறவேண்டும் என்பதில் நம் கவனம் இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்த நல்லுணர்வுக்கு முடிவு கட்டும் வகையில் சில சக்திகள் இறங்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். எச்சரிக்கை தேவை. இந்தக் காலகட்டத்தில் மலேசியர்களின் குறிக்கோள் தேசிய கடனைத் தீர்ப்பதுதான். அந்த முயற்சி வெற்றிபெற வேண்டும்.