மருந்து விநியோகத்தில் தில்லுமுல்லுக்கு இனி இடமிருக்காது எல்லாம் வெளிப்படையாக நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.
“ஏற்கனவே சொன்னதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.. மருந்து விநியோகம் திறன்பட்ட முறையிலும் பொறுப்பான முறையிலும் ஒளிவுமறைவு இல்லாமலும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும்”, என்று சுல்கிப்ளி இன்று டிவிட் செய்திருந்தார்.
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் பலவீனங்களையும் பண விரயத்தையும் ஒழுக்கக்கேடுகளையும் முறியடிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
நாட்டில் மருந்து விநியோகம் மொத்தமும் முன்னாள் பிஎன் அரசாங்கத்துடன் தொடர்புள்ள நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் லெம்பா பந்தாய் எம்பி பாஹ்மி பாட்சில் அண்மையில் கேட்டுக்கொண்டிருந்தார்.
பிரி மலேசியா டுடே செய்தித்தளம் முன்னாள் அமைச்சர் ஒருவர் உள்பட பிரபல அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ள 20 நிறுவனங்கள் நாட்டில் மருந்துகள் விநியோகத்தைக் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்ததை அடுத்து அவர் அவ்வாறு கேட்டுக்கொண்டார். அந்நிறுவனங்கள் 2013க்கும் 2016க்குமிடையில் ரிம3.7பில்லியன் மதிப்புள்ள மருந்துகளை விநியோகம் செய்வதற்கான குத்தகைகளைப் பெற்றிருந்தனவாம்.