கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தாந்துயாவின் தந்தை – சேடேவ் சாரீப்பூ – நாளை புத்ராஜெயாவில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டை சந்திக்கவுள்ளார்.
நாளை மாலை 5 மணியளவில், பிரதமர் அலுவலகத்தில் அச்சந்திப்பு நடைபெறும் என சேடேவ்-இன் வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங் தெரிவித்தார்.
மகாதிரிடம் என்ன தெரிவிக்க விரும்புகிறார் என்று கேட்டதற்கு, இதுவரை எதனையும் சிந்திக்க முடியவில்லை என்றார் சேடேவ்.
“பிரதமர் என்னைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
“என்னால் அதைப் பற்றி யோசிக்க முடியவில்லை,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், சாரீப்பூ குடும்பத்தின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வரவும் நீதி கிடைக்கவும் டாக்டர் மகாதிர் தலைமையிலான அரசாங்கம் எதையாவது செய்யும் என நம்புவதாக சேடேவ் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
இதற்கிடையில், ராம்கர்ப்பால், இன்று அட்டார்னி ஜெனரல் டோமி தோமஸ் உடனான சந்திப்பில், கொலை வழக்கை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைப்பது பற்றி பேசப்படும் என்றார்.
போலிஸ் விசாரணையை மீண்டும் திறப்பதற்கும் கொலை செய்யத் தூண்டியது யார் என்று கண்டுபிடிக்கவும் இது ஒரு மாற்று வழியாக இருக்கும் என்றார் அவர்.
அக்டோபர் 2006-ல், அல்தாந்துயா (28), சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அவரது உடல் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் இராணுவ-தர வெடிப்பொருட்களால் வெடித்து சிதறடிக்கப்பட்டது.