முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், போலீஸ் உயரடுக்கின் இரண்டு உறுப்பினர்கள் கொலை செய்த மங்கோலியப் பெண், அல்தான்துயா ஷாரிபூவைத் தனக்கு தெரியாது என மீண்டும் வலியுறுத்தினார்.
அல்தாந்தூயாவின் தந்தை செடேவ் ஷாரிபூ, அக்கொலை வழக்கை மீண்டும் விசாரணை செய்ய அரசாங்கத்தைத் தூண்டிவரும் வேளையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நஜிப்பின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டாக்டர் மகாதிர் அவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த தனது ஒப்புதலை தெரிவித்துவிட்டார்.
இருப்பினும், நஜிப்பின் பார்வையில், அவ்வழக்கு தீர்க்கப்பட்டுவிட்டது.
“அல்தாந்தூயா வழக்கு தீர்க்கப்பட்ட ஒன்று. அவரை நான் சந்தித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, பதிவு இல்லை, படங்கள் இல்லை அல்லது எனக்கு அவரைத் தெரியும் என்று சொல்ல சாட்சிகள் இல்லை.
“அவ்வழக்கு முறையான விசாரணைக்கு உட்பட்டது மற்றும் விசாரணையின் போது என் பெயர் எழவில்லை.
“நான் அல்லாஹ்வின் பெயரால், ஒரு மசூதியில் சத்தியமும் செய்தேன், அந்த விஷயத்தில் எனக்கு தொடர்பு எதுவும் இல்லை என்று,” என அவர் ராய்ட்டரிடம் கூறினார்.
அல்தாந்தூயா 2006-ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் வெடிகுண்டுகளால் வெடித்து சிதறடிக்கப்பட்டது, அவ்வகை வெடிகுண்டுகள் பொதுவாக இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடியவை.
கொலை செய்யப்பட்டபோது, அவருக்கு 28 வயது.
நஜிப் துணைப் பிரதமராக இருந்தபோது, அவரின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றிய இரண்டு போலீஸ்காரர்கள், அல்தாந்துயாவைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.