தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறும் தற்போதைய 21 வயதை பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் 18க்கு குறைக்க வேண்டும் என்று பிரதமர் மகாதிர் ஆலோசனை கூறுகிறார்.
மக்கள் கற்றறிந்தவர்களாகவும் சுயமாகச் சிந்தித்து தீர்மானிக்கும் திறனுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்ற அரசாங்கத்தின் நம்பிக்கையை இதன் வழி வெளிப்படுத்த இயலும் என்று அவரை மேற்கோள் காட்டி த மலே மெயில் செய்தி கூறுகிறது.
உலகின் இதர நாடுகளின் நடைமுறையை நாம் பின்பற்றுவது பற்றி சிந்திப்பது பயனுடையதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் வாக்களிக்க தகுதி பெறும் வயதாக 18ஐ ஏற்றுக்கொண்டுள்ளன என்று பிரதமர் மகாதிர் சுட்டிக் காட்டினார்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் இளைஞர்கள் காட்டிய ஆர்வம், பொறுப்புடமை ஆகியவற்றை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அமைதியான முறையில் அதிகாரம் பக்கத்தான் ஹரப்பானுக்கு மாறியது “மலேசியன் பாணி”யில் செய்யப்பட்ட “மக்கள் சக்தி”யின் வெளிப்பாடாகும் என்று அவர் கூறினார்.
“மலேசியன் பாணி” பற்றி விவரித்த அவர், இங்கு மக்கள் சக்தி அமைதியான முறையில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் வாக்களித்த மக்களின், குறிப்பாக இளைஞர்களின், எண்ணிக்கை மிகப் பெரிதாகும்.
இதன் காரணமாக, அனைத்து இயந்திரங்களும், தேர்தல் ஆணையம் உட்பட, அதன் கையிலிருந்தும் முந்தைய அரசாங்கம் அதன் தோல்வியைத் தடுக்க முடியவில்லை என்று மகாதிர் விவரித்தார்.
“புலாங்மெங்குண்டி” இயக்கத்தில் பங்கேற்றிருந்த இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் மகாதிர் அவரின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.