நஜிப் : தி.ஆர்.எக்ஸ். திட்டத் தகவலில் குவான் எங் பொய் சொல்கிறார்

துன் ரஷாக் எக்ஸ்சேஞ்’ மேம்பாட்டுத் திட்டத்தில், நிதியமைச்சர் லிம் குவான் எங் பொய் தகவல்களைப் பரப்புவதாக நஜிப் ரஷாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்திட்டத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், புத்ராஜெயா RM2.8 பில்லியனைச் செலவழிக்க வேண்டும் என்று லிம் கூறியதன் தொடர்பில், முன்னாள் பிரதமரின் அறிக்கை வெளியிடப்பட்டது.

“ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, கோலாலம்பூரை உலகத் தர வர்க்க நிதி மையமாக உருமாற்றவிருக்கும் அத்திட்டத்தைத் தொடர, அரசாங்கம் முடிவெடுத்ததில் மகிழ்ச்சி. ஆயினும், தி.ஆர்.எக்ஸ். சிட்டி சென். பெர். நிறுவனத்திற்கு தி.ஆர்.எக்ஸ். , பண்டார் மலேசியா திட்டங்களில் முறையே 70 மற்றும் 486 ஏக்கர் நிலம் உள்ளது எனும், லிம்-இன் அறிக்கையில் பாதி உண்மை, மீதி பொய் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

“நிதி அமைச்சு RM2.8 பில்லியனைக் கூடுதலாக செலுத்தினாலும், தி.ஆர்.எக்ஸ்.  திட்டம் குறைந்தபட்சம் RM7.8 பில்லியன் மதிப்புள்ளதாக இருக்கும், ஆக அத்திட்டம் இலாபம் காட்டுவதாக லிம் ஒப்புக்கொள்கிறார்.

“ஆக, இது இலாபத்தை உருவாக்கும் திட்டமே அன்றி, காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒன்றாகக் கருத முடியாது,” என்று ஜூன் 21-ம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில் நஜிப் தெரிவித்தார்.

RM30 பில்லியன் தி.ஆர்.எக்ஸ். மற்றும் பண்டார் மலேசியா திட்டத்தின் கணிசமான நில சொத்து மதிப்பை முன்னிலைப்படுத்த லிம் தவறிவிட்டார்.

“முக்கியமாக, தி.ஆர்.எக்ஸ்.சி.-யின் பணத்தை 1எம்டிபி தவறாகப் பயன்படுத்தவில்லை.

“மற்ற பல நிறுவனங்களைப் போல, RM3 பில்லியன் கடனை, ஒரு காலகட்டத்தில் தி.ஆர்.எக்ஸ்.சி. 1எம்டிபி-க்குக் கொடுத்தது.

“31 மார்ச் 2017 முதல், இந்நிறுவனங்களுக்கு இடையிலான அனைத்து கடன்களும் 1எம்டிபி மூலம் செலுத்தப்பட்டது.

“எம்.ஒ.ஃப்.இன்க்-இன் ஒப்புதலுடன் இந்தப் பணம் செலுத்தப்பட்டது. மார்ச் 31, 2017 நிதி அறிக்கையில் தி.ஆர்.எக்ஸ்.சி. தணிக்கையாளர்கள் அதனை முழுமையாக பரிசீலனை செய்து, ஒப்புதல் அளித்துள்ளனர்,” என நஜிப் தெரிவித்தார்.

தி.ஆர்.எக்ஸ்.சி. 100 விழுக்காடு, எம்.ஒ.ஃப்.இன்க் நிறுவனமான 1எம்டிபி-க்குச் சொந்தமானது, ஆக 1எம்டிபி  ‘கடன் வழங்க , அதன் சொந்த நிதியிலிருந்து RM3 பில்லியனைத் திருட முடியாது,” என்றார் அவர்.