கடந்த ஜூன் 11-ம் தேதி, பிரதமர் அலுவலகத்திற்கு முன்புறம் ஒன்றுகூடியதற்காக மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வனின் வாக்குமூலத்தைப் போலிஸார் நேற்று பதிவு செய்தனர்.
போலிசாரைச் சந்தித்த பின்னர் தொடர்புகொண்ட போது, அமைதி ஒன்றுகூடல் சட்டம் 2012-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக, மலேசியாகினியிடம் அருட்செல்வன் தெரிவித்தார்.
“இது வரி செலுத்துவோர் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கும் ஒரு செயல் என்று நான் நினைப்பதாக எனது வாக்குமூலத்தில் நான் தெரிவித்தேன்.
“போலிசாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணைகள், சுதந்திரமாக ஒன்றுகூடும் உரிமையை எதிர்க்கும் மற்றும் பொது நிதியை வீணாக்கும் நடவடிக்கையாகும்,” என்று அவர் கூறினார்.
பேங்க் நெகாரா ஊழியர் கோகிலா பதவி நீக்கப் பிரச்சனையில் தலையிடுமாறு, பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கும் பொருட்டு, அருட்செல்வனும் 50-க்கும் மேற்பட்ட ஆர்வலர்களும் கடந்த வாரம் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பு கூடியதாக அருட்செல்வன் சொன்னார்.
பிரதமர் அலுவலகத்தில் கூடியிருந்த ஆர்வலர்கள் தவறு எதுவும் செய்யவில்லை என்று வலியுறுத்திய அருட்செல்வன், ஆனால் போலீசார் அதே நாளில் அவருக்கு எதிராக புகார் செய்தது ஏன் என்று தெரியவில்லை என்றார்.
“மக்கள் அங்குப் பதாகைகளைச் சுமந்து நின்று கொண்டிருந்தனர், கோகிலாவை மீண்டும் பணியில் அமர்த்தும்படி கேட்டுக்கொண்டனர். போலிசார் மக்களைக் கலைந்துசெல்லும்படி கேட்கவில்லை, அங்கு எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை,” என்று அவர் கூறினார்.
கோகிலா பேங்க் நெகாரா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூட இலாகாவில் ஒரு மேலாளராக, கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
2016-ம் ஆண்டு தொழிலாளர் தினப் பேரணியில், “ஜிஎஸ்டி-ஐ ஒழிக்கவும்” எனும் டி-சட்டையை அணிந்திருந்ததற்காக, அவர் கடந்தாண்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டார். ஜூன் 1, 2018-ல் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஜி.எஸ்.டி.-ஐ நீக்கியது.