‘ஊழலுக்கு 1எம்டிபி இயக்குனர் வாரியம்தான் காரணம் என்று சொல்லவில்லை என நஜிப் மறுப்பு’
பெயரிலி _1371465729: முன்னாள் பிரதமர் நஜிப் அவர்களே, 1எம்டிபி-இல் ஒன்று சரியாக இல்லை என்றால் அது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அது 1எம்டிபி வாரியம் மற்றும் நிர்வாகத்தின் பொறுப்பு.
அது பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது என்று நீங்கள் கூறுவதை வைத்துப் பார்த்தால் வாரியமும் நிர்வாகமும் உங்களுக்கு அது குறித்துத் தெரியப்படுத்தவில்லை அதனால்தான் 1எம்டிபி-இல் இத்தனை குளறுபடிகள் என்றாகிறது.
ஆக, இத்தனை குளறுபடிகளுக்கும் வாரியமும் நிர்வாகமும்தான் காரணம் என்று கூற வருகிறீர்களா? அப்படி என்றால் எம்டிபி அதிகார பீடத்தின் உச்சியில் இருந்த உங்களின் பொறுப்பு என்ன?
பெயரிலி_3e86: முதலில், பழியை 1எம்டிபி இயக்குனர் வாரியம்மீது போட முயன்றார். பிறகு அப்படிச் சொல்லவில்லை என்று மறுத்தார். உண்மை என்னன்ன, அவர்தான் காரணம், வேறு யாருமல்ல.
கெட்டிக்கார வாக்காளன்: நஜிப் தவறுகளுக்கும் நிதி முறைகேடுகளுக்கும் என்றுமே பொறுப்பேற்றதில்லை. காணாமல்போன ஜெட் இயந்திரமாகட்டும் நிதி இழப்புகளாக இருக்கட்டும் தவறு செய்ததை என்றும் அவர் ஒப்புக்கொண்டதில்லை.
1எம்டிபி -இல் அவர் செய்த குளறுபடிகளுக்கு வாரியமும் நிர்வாகமும்தான் பொறுப்பு என்று அவர் கூறவில்லை என்றால் வேறு யார் அதற்குப் பொறுப்பு?
ஊடகங்களா? ஜோ லாவா?, வங்கிகளா?. உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் தம் வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்திருக்கவில்லை என்று கூறுவதைக் கேட்க சிரிப்புத்தான் வருகிறது.
அஸிடிஸ்: நஜிப், மலேசியர்கள் கெட்டிக்காரர்கள், நீங்கள் கூறும் பொய்யைக் கண்டுகொள்வார்கள் என்பதால் பழி உங்கள்மீது விழுவதைத் தவிர்க்கப் பார்க்கிறீர்கள்.
கிறிஸ்க்வான் சாபா: உங்கள் வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது. ஒரு பகுதி பணத்தை எடுப்பதற்குக் காசோலைகளில் கையெழுத்திட்டிருக்கிறீர்கள். இப்போது இவ்வளவு பணம் எங்கிருந்தது வந்தது, யார் போட்டார்கள் என்பது தெரியாது என்கிறீர்கள்.
ஒன்றும் அறியாதவர்கூட தன் வங்கிக் கணக்கில் சில ஆயிரம் ரிங்கிட் திடீரென்று வருவதைக் கண்டால் விவரம் அறிய வங்கிக்கு விரைவார். உங்கள் கணக்கிலோ மில்லியன் கணக்கான ரிங்கிட்.
நீங்கள் எப்படி வந்தது என்று வங்கியை அழைத்துக் கேட்கவில்லை. எனில், பெரும் பணம் கணக்குக்கு மாற்றிவிடப்படும் என்பதை எதிர்பார்த்திருக்கிறீர்கள். சரிதானே?
சிங்க ராஜா: நஜிப் பேசுவதைப் பார்த்தால் எதிர்வரும் வழக்குக்கான முன்னுரைபோல் தெரிகிறது. அவருக்குப் பின்னேயிருந்து யாரோ ஆலோசனை கூறிக் கொண்டிருக்கிறார்கள்- எக்காரணம் கொண்டும் பொறுப்பு ஏற்க வேண்டாம் என்று.
உண்மை மலேசியன்: நஜிப்பைக் குறைகூறக் கூடாது. இயக்குனர் வாரியத்தைக் குறைகூறக் கூடாது. அம்னோ/பிஎன்னைக் குறைகூறக் கூடாது. அப்படி என்றால் யாரைக் குறைகூறுவது? தங்களின் பணத்தைச் சுரண்டி, நாட்டை போண்டியாக்க அவர்களை இத்தனை காலம் ஆட்சியில் வைத்திருந்தார்களே அந்த மக்களையா?
நிகழ்ந்த தவறுகளுக்கு யாராவது ஒருவர் பொறுப்பு ஏற்கத்தான் வேண்டும். பொறுப்பு ஏற்க வேண்டியவர் நீங்கள்தான், நஜிப் அவர்களே.
பனோராமா123: நிகழ்ந்துள்ள மோசடிகளில் உடந்தையாக இருந்த 1எம்டிபி முன்னாள் வாரிய இயக்குனர்களும் மற்ற அதிகாரிகளும் தாமதமின்றி அதிகாரிகளிடம் நடந்ததை விவரமாகக் கூறிட வேண்டும்.
தவறினால் “முறைகேடுகள்” நிகழ அங்கீகாரம் அளித்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுக் கடுமையாக தண்டிக்கப்படலாம்.
நஜிப் இப்போது தங்களைப் பாதுகாக்கும் நிலையில் இல்லை என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.