ஹமிடி: ஹரப்பான் ஆட்டம் கண்டுவிட்டது; அம்னோ புத்ரா ஜெயாவை ஜிஇ 15 க்கு முன் கைப்பற்றும்

 

15 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் ஆட்டம் கண்டுள்ள பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாக அம்னோ இடைக்கால தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

அம்னோவுக்கு மிகச் சிறந்தது எதுவோ அதை நான் செய்வேன். அதன்படி நாம் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம் என்று கூட்டரசுப் பிரதேச அம்னோ இன்று ஏற்பாடு செய்திருந்த ஹரி ராயா நிகழ்ச்சியில் பேசிய ஹமிடி கூறினார்.

அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு அடுத்தப் பொதுத் தேர்தல் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஹரப்பான் அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடும் என்று கூறிய ஹமிடி, ஹரப்பானிலிருந்து வெளியேறுகிறவர்கள் மிகப் பெரிய கட்சியும் மிக அதிகமான சட்டமியற்றுகிறவர்களையும் கொண்ட அம்னோவிடம் வருவார்கள் என்றாரவர்.

ஹரப்பான் அமைச்சர்களையும் ஹமிடி குறைகூறினார். முதலில் வெளிநாட்டு சமையல்காரர்களை தடைசெய்யப்.போவதாக கூறிய மனித வள அமைச்சர் மு. குலசேகரன், இப்போது அது முன்மொழிதல் கட்டத்தில் இருப்பதாகக் கூறியதை ஹமிடி சுட்டிக் காட்டினார்.

“உங்களுக்கு எப்படி அரசாங்கமாவது என்று தெரியாவிட்டால், அதை அம்னோவிடம் கொடுங்கள். நாங்கள் மிகச் சிறந்த அரசாங்கமாக முடியும்”, என்று ஹமிடி மேலும் கூறினார்.