வைரலாகும் அமைச்சரவைப் பட்டியல் சரியானதல்ல

முழு  அமைச்சரவைப்  பட்டியல்    என்று    சமூக   வலைத்தளங்களில்   வலம்  வந்து  கொண்டிருக்கும்   ஒன்று  சரியானதல்ல    என   அரசாங்கத்துக்கு    அணுக்கமான    வட்டாரங்கள்    கூறுகின்றன.

“பெரும்பாலும்   சரியாக   இருந்தாலும்   அது   இறுதிப்  பட்டியலாகத்     தெரியவில்லை.

“சில   பெயர்களைக்  காணோம்.  சிலரின்   பெயர்கள்  இருக்கின்றன.  ஆனால்,  அவர்கள்   ஏற்கப்போவதாகக்  குறிப்பிடப்பட்டிருக்கும்   பொறுப்புகள்   சரியானவை  அல்ல. அது    சரியான   பட்டியலாக  இருக்காது”,  என   அவ்வட்டாரங்கள்   மலேசியாகினியிடம்    தெரிவித்தன.

கடந்த   வாரம்,  பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்,    மேலும்   15   அமைச்சர்களின்    பெயர்களை   மாமன்னர்   ஐந்தாம்   சுல்தான்  முகம்மட்டிடம்    சமர்ப்பித்தார்  என  மலேசியாகினி    செய்தி   வெளியிட்டிருந்தது.

“மொத்தம்  28  அமைச்சர்கள்   இருப்பார்கள். சாபா,  சரவாக்குக்குத்   தலா   இரண்டு   அமைச்சர்கள்.  அப்பட்டியலில்   துணை  அமைச்சர்களின்   பெயர்களும்    செனட்டர்களாக  நியமனம்   பெறுவோரின்  பெயர்களும்   இடம்பெற்றுள்ளன”,  என  அரசாங்க    வட்டாரம்   ஒன்று   தெரிவித்தது.

இதனிடையே,  இஸ்தானா   நெகரா   நேற்றிரவு  வெளியிட்ட     அறிக்கை   ஒன்றில்  அடுத்த   திங்கள்கிழமை,  ஜூலை   2ஆம்   நாள்   புதிய   அமைச்சர்கள்  பதவி   உறுதிமொழி   செய்து  வைக்கப்படுவார்கள்   என்று  கூறிற்று.