நஜிப் கைது செய்யப்படலாம் என்ற வதந்தியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் நஜிப்பின் வீட்டிற்கு வெளியில் முகாமிட்டுள்ளனர்

 

இன்றிரவு ஜாலான் லங்காக் டூத்தாவிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியில் செய்தியாளர்கள் கூடியுள்ளனர். நஜிப் கைது செய்யப்படுவார் என்ற வதந்தியைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

சுமார் 30 செய்தியாளர்கள் அங்கு கூடியுள்ளனர். சாதாரண உடையில் காணப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் வீட்டின் நுழைவாயிலில் காவலில் இருக்கின்றனர்.

கடந்த மாதம் பொதுத் தேர்தலில் நஜிப் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இரவு மணி 9 அளவில், போலீஸ் வாகனமோ வருகையாளர்களோ அங்கு வந்து போகவில்லை.

தங்களை இரவு முழுவதும் இங்கு முகாமிட்டிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதற்காக அவர்கள் கூறினார். ஏனெனில் விசாரணையாளர்கள் 1எம்டிபி மீதான விசாரணை இன்றிரவு முடித்துக் கொள்கின்றனர் என்று அவர்கள் மேலும் கூறினார்

1எம்டிபி மீதான விசாரணை மேலும் தொடர்வதற்கு வசதியாக நஜிப்பின் சிறப்பு அதிகாரியை ஏழு நாள்களுக்கு தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திற்கு (எம்எசிசி) அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நஜிப் எக்கணமும் கைது செய்யப்படுவார் என்ற வதந்தி வலுப்பெற்றது.

கடந்த வாரம், பிரதமர் மகாதிர் ராய்ட்டரிடம் பேசிய போது முன்னாள் பிரதமருக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று கூறியிருந்தார்.

புக்கிட் அமான் சிசிஐடி இயக்குனர் அமர் சிங் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நஜிப்புக்குத் தொடர்புடைய சொத்துக்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பை அவர் வெளிப்படுத்துவார்.