மிகப் பெரிய அளவிலான ரிம1பில்லியன் சுருட்டலுக்கு நஜிப் பதில் கூறியாக வேண்டும், கைரி கூறுகிறார்

முன்னாள் பிரதமர் நஜிப்பின் இல்லங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய அளவிலான பொருள்களுக்கு, அவற்ருக்கான சில்லறை வியாபார மதிப்பீடு சுமார் ரிம1.1பில்லியன், நஜிப் பதில் கூறியாக வேண்டும் என்று அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் கைரி ஜமாலுடின் இன்று கூறினார்.

ஆனால், போலீஸ் புலன்விசாரணை முடிவதற்கு முன்னால் எந்தத் தரப்பினரும் குற்றம் சுமத்தும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பதில் கூற வேண்டும் மற்றும் ரிம1 பில்லியன் மதிப்பிலான கைப்பற்றப்பட்ட பொருள்கள் அவருக்குச் சொந்தமானது என்றால், அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கைரி கூறினார்.

ஆனால், போலீஸ் விசாரணை முடிவதற்கு முன்பாக யாரையும் கண்டிக்கும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்றாரவர்.

நமக்கு அப்பொருள்களின் விலை மதிப்பு பற்றி தெரியும். ஆனால் அது எப்படி வந்தது, அதற்குச் சொந்தக்காரர் யார் மற்றும் இது போன்றவை தெரியாது என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.

இந்த விவகாரத்தில் போலீஸ் விசாரணை மற்றும் நீதிபரிபாலன நடவடிக்கைகள் முற்றுப் பெற்ற பின்னர்தான் அம்னோ அதன் நிலையைத் தெரிவிக்கும் என்று கூறிய கைரி, அம்னோ எவரையும் சட்டத்திலிருந்து பாதுகாக்காது என்று அவர் வலியுறுத்தியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

அம்னோ தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரான முன்னாள் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இது குறித்து விரிவாக எதுவும் சொல்ல மறுத்து விட்டார்.

இதை நாம் சட்ட ஆளுமை இடம்பெற விட்டு விடுவோம். நடவடிக்கை எடுக்க வேண்டியதை அதிகாரிகளிடம் விட்டு விடுவோம் என்று அவர் கூறியதாக மலே மெயில் செய்தி கூறுகிறது.