ஜூலை 16இல் தொடங்கும் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் 2018 பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் அகற்றப்படும் என்பதை புத்ரா ஜெயா மறுபடியும் அழுத்தமாகக் கூறியுள்ளது.
ஐநாவுக்கான மலேசியாவின் தூதரும் ஜினிவாவில் உள்ள மற்ற அனைத்துலக அமைப்புகளுக்குமான நிரந்தரப் பேராளருமான அம்ரான் முகம்மட் ஸின் ஜூன் 17-இல் எழுதிய கடிதமொன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.
பொய்ச் செய்திச் சட்டம் குறித்துக் கவலைப்பட்டு ஏப்ரல் 3-இல் கருத்துத் தெரிவித்திருந்த கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஐநா சிறப்பு அதிகாரி டேவிட் கேய்க்கு அளித்த மறுமொழியில் அம்ரான் அதைக் கூறியிருந்தார்.
“மலேசியாவின் புதிய அரசாங்கம் பொய்ச் செய்தித் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளதை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகள் தொடாங்கி விட்டன. ஜுலை 16-இல் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அதற்கான பரிந்துரை முன்வைக்கப்படும்”, என்றாரவர்.
மக்களவையில் பொய்ச் செய்தித் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட மறுநாளே அதை அகற்றும்படிக் கேட்டுக்கொண்டு கேய் அப்போதைய மலேசிய அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார்.